`எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்

``அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வந்து இரண்டு நாள் தங்கி வாழ்ந்தால் அப்போது எங்கள் வேதனை தெரியும்'' என்று கிராம மக்கள் கண்ணீருடன் கூறினர்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த சந்தப்படுகை மற்றும் திட்டுப்படுகை ஆகிய கிராமங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆறு அருகில் இருந்தும் மேற்கண்ட கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் தண்ணீர் அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் அப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் குடிநீருக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  

Drinking water

இதுபற்றி அந்தக் கிராமவாசிகளிடம் பேசியபோது. ``குடிநீருக்காக நாங்கள் பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கைவிடுத்தும் பலனில்லை. அதன்பின் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தினோம். இறுதியில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து எங்களுக்கு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தனர். சந்தப்படுகை கிராமம் அருகே கே.ஏ.வி.நகரில் 30,000 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்றது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், திடீரென கட்டுமானப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கிடப்பில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து பல மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. ஆனால், அதன் அருகில் வசித்தும் அநாதையாகக் குடிநீருக்காகத் தவியாய்த் தவிக்கிறோம். முதலில் குடிநீருக்கான இத்திட்டம் கொண்டுவரப் போராட்டம். தற்போதோ இத்திட்டத்தை முடித்துத் தரப் போராட்டம் என்னதான் செய்வது? இது தொடர்பான அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வந்து இரண்டு நாள் தங்கி வாழ்ந்தால் அப்போது தெரியும் எங்கள் வேதனை'' என்றனர் சோகமாக.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்கொடியிடம் விளக்கம் கேட்டபோது, ``ஏற்கெனவே இருந்த நிலவரப்படி இதை ஒப்பந்தகாரர் ஏற்றுக்கொண்டார். ஆனால், தற்போதுள்ள நிலையில் கூடுதல் செலவினம் ஆகும் என்பதால் அதை எங்களிடம் முறையிட்டு வேலையை நிறுத்தியிருக்கிறார். நாங்கள் அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று சரிசெய்துள்ளோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு மக்களுக்குப் பயன்படும்'' என்று உறுதியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!