`எது நல்ல செயல்.. எது தீய செயல்?'- மாணவிகளுக்கு விளக்கிய ஆசிரியை

80% குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களால்தான் பாலியல் வன்கொடுமை நடப்பதாக மதுரையில் நடைபெற்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை பற்றி மாணவிகளுக்கு விழிப்பு உணர்வு

மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 'குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை - புரிதலும் பகிர்தலும்' என்ற தலைப்பில் விழிப்பு உணர்வு முகாம் நடைபெற்றது. திருநகர் கிரேஸ் அறக்கட்டளையும் வெள்ளிவீதியார் பள்ளியும் இணைந்து விழிப்புஉணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில், பள்ளி மாணவிகளுக்கு எளிமையாகத் தகவல் செல்லும் வகையில் நாடகம் நடித்துக் காட்டப்பட்டது . ``எவ்வாறு தீயவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். எது நல்ல செயல். எது தீய செயல்'' என்று அந்த நாடகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷீலா ஜாய் பெல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் கார்த்திகா ஆலோசனைகள் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து விழிப்புஉணர்வு முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜோதி கூறுகையில், ``கிராமத்தினருக்கு அதிக அளவு குழந்தைகள் பாதுகாப்பு அடிப்படைச் சட்டங்கள் பற்றி தெரியவைக்க வேண்டும். அவர்களிடம் விழிப்பு உணர்வு முதலில் முழுமையாகச் சென்றடையும்போதுதான் தவறு நடப்பதை குறைக்க முடியும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். குழந்தைகளைத் துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கக் கூடாது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், நாடு பாதுகாப்பு இல்லாத சூழலுக்குத் தள்ளப்படும். 80 சதவிகிதம் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களால்தான் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. எனவே, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!