வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (19/07/2018)

கடைசி தொடர்பு:17:02 (19/07/2018)

`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

``வரி ஏய்ப்பு இருப்பதனால்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அப்படியிருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு கட்சியை குறை சொல்வது தவறு'' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்

ஓ பன்னீர்செல்வம்

ஆயுர்வேத சிகிச்சைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்திருந்தார். சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது. கடைமடை பகுதிக்கு நீர் செல்வதற்கு, ஒரு வார காலமாகும். நாகப்பட்டினத்தில் தூர்வாரும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 4-5 நாள்களில் அந்தப் பணிகள் முடிவடையும். பிறகு விவசாயிகளுக்கு தங்குதடையின்றி காவிரி நீர் கிடைக்கும்.

வரி ஏய்ப்பு இருப்பதனால்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சியிலும், எந்த ஆட்சி வந்தாலும் ஒப்பந்ததாரர் பணி செய்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது, குறிப்பிட்ட ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு. தங்க தமிழ்ச்செல்வன் அவரின் முதுகுப் பின்னால் உள்ள அழுக்கைப் பார்க்க வேண்டும். அவருடைய கேள்விக்கான பதிலை தவிர்த்தே வருகிறேன். ஏனென்றால் அவர் உண்மை சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தலைமைக் கழகம் கூடி, முதல்வர் சென்னை வந்தபின் நல்ல முடிவை அறிவிப்போம்" என்றார்.