எப்படி சான்றிதழ் வாங்க வேண்டும்? வீடுகளுக்குச் சென்று மாணவர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி!

கை, கால்கள் நன்றாக இருக்கும் நம்மில் பலரே அடுத்தவர்களுக்கு உதவுவதை விரும்புவதில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தான் சார்ந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இப்போது மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சேரும் நேரம் என்பதால், அவர்களுக்குத் தேவைப்படும் சாதி, வருமானச் சான்றிதழ்களை வாங்கும் முறைகளை வீடு வீடாகச் சென்று விளக்கி உதவி வருகிறார் மாற்றுத்திறனாளியான நாகராஜன்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் வரும் கள்ளப்பள்ளியைச் சேர்ந்தவர்தான் இந்த நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவரை, இவரின் பெற்றோர் கண்டுகொள்வதில்லை. இதனால், நூறுநாள் வேலைக்குப் போய் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். அதோடு, அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுகள் என வாங்கித் தருகிறார். அதோடு, அருகில் உள்ள அங்கன்வாடிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு தனது பணத்தில் பாய்கள் வாங்கித் தருகிறார். அதோடு, மாவட்டம் முழுக்க பல பகுதிகளிலும் இருக்கும் அடிப்படை பிரச்னைகள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி, அந்தப் பிரச்னைகள் தீர வழிவகை செய்கிறார். இப்படி, 'மக்கள் சேவையே தனக்குத் தேவை' என்று வாழ்ந்துவரும் நாகராஜனின் லேட்டஸ்ட் அவதாரம், பள்ளி மாணவர்களுக்கு வருமானம், சாதிச் சான்றிதழ் வாங்க உதவுவது.

அந்தச் சான்றிதழ்களை எப்படி வாங்க வேண்டும் என்ற தகவல்களைத் தெளிவாக நோட்டீஸாக அச்சடித்து வைத்திருக்கிறார். அதை கள்ளப்பள்ளி, லாலாப்பேட்டை பகுதிகளில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறார். சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களை கையோடு தனது செலவில் அழைத்துப் போய், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் வாங்கித் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார்.

நாகராஜனிடம் பேசினோம். ``நான் சின்ன வயசுல நல்லா படிக்க நெனச்சேன். ஆனால், ஊனமா பொறந்த என்னை, வீட்டைவிட்டே தொறத்திட்டாங்க. கலங்கி நிக்காம, தன் கையே தனக்கு உதவின்னு நோஞ்சான் கையை வச்சுக்கிட்டு கிடைச்ச வேலைகளைச் செஞ்சு காலத்தை ஓட்டிட்டு வருகிறேன். எனக்குக் கிடைக்காத படிப்பு எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கனும்ன்னு நெனச்சேன். அதனால், வறுமையான நிலையில் உள்ள மாணவர்களுக்கு படிப்புக்குத் தேவையான என்னாலான உதவிகளைச் செய்றேன். இப்போ, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் நேரம் என்பதால், சான்றிதழ் வாங்க உதவுகிறேன். நான் இன்னும் மனசால ஊனமாகலை. அதுவரைக்கும் பிறருக்கு உதவிகிட்டே இருப்பேன். குறிப்பாக, ஏழைகளுக்கு கல்வி கிடைக்கிறதுக்காக" என்றார் உணர்ச்சி மேலிட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!