``லாரி ஸ்டிரைக் எதிரொலி" - அதிகாரிகளை அலர்ட் செய்த ஆட்சியர் | Karur collector alerts district authorities over precaution measures on lorry strike

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (19/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (19/07/2018)

``லாரி ஸ்டிரைக் எதிரொலி" - அதிகாரிகளை அலர்ட் செய்த ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

 'நாளை முதல் லாரி உரிமையாளர்கள் சங்க வேலை நிறுத்தம் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் சென்று சேர மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (19.8.2018) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித்தலைவர் அன்பழகன். தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், ``லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (20.7.2018) முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும், அனைத்து மக்களுக்கும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சென்று சேரவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். லாரிகள் ஓடாத நிலையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பேருந்துகளில் ஏற்றிச்செல்ல போக்குவரத்துத்துறை அனுமதிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் பால் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேரும் வகையில் காவல்துறையினரின் உரிய பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் முகப்பில் 'அத்தியாவசியப் பொருள்கள் - அவசரம்' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டிச்செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வேலை நிறுத்தம் நடைபெறும் நாள்களில் பொதுமக்களுக்குப் பொருள்கள் கிடைப்பதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ, காவல்துறையின் '100' என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு, தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்காகக் கொண்டு செல்லப்படும் அடிப்படைத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து வகையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்" என்றார்.