விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை! - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம்

மைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரையும், கரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தம்பிதுரை

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கட்சி நிர்வாகிகளை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்றார். இப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அ.தி.மு.க-வின் மாவட்ட, நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகளை டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல இருக்கிறார்.

இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ``மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் யாரும் தினகரன் அணிக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் விஜயபாஸ்கரும் தம்பிதுரையும் உறுதியாக இருக்கின்றனர். அதனால்தான் விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அண்மையில், தமிழக சட்டசபையில் போக்குவரத்துத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதற்காக மாவட்டத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினரை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றார் அமைச்சர்.

மானியக் கோரிக்கை நிறைவடைந்ததும் விமானம் மூலமாகவே அவர்களை அனுப்பி வைத்தார். தற்போது, இதே பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. மாவட்ட நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று நாடாளுமன்றம், சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றைப் பார்வையிட ஏற்பாடு செய்ய இருக்கிறார்.

இதற்குக் காரணம், கரூர் மாவட்ட அ.தி.மு.க புள்ளிகள் பலரும் தினகரன் அணிக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் விமானப் பயணங்கள் அரங்கேறுகின்றன. இதுவரையில் கழக நிர்வாகிகளை எந்த அமைச்சரும் விமானத்தில் அழைத்துச் சென்றதில்லை. அடுத்தவருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், மறுபடியும் கரூர் தொகுதியில் நிற்பதற்காகவே விமானப் பயண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார் தம்பிதுரை" என்றார் விரிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!