வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:18:06 (20/07/2018)

`5 வருஷம் கழிச்சு அமராவதி ஆற்றில் தண்ணீர் வருது' - விவசாயிகள் பூரிப்பு

``கரூர் நகரம் வழியா போற அமராவதி ஆற்றில் கடந்த 5 வருஷமா தண்ணீர் வந்ததில்லை. போன வருஷம் தனியா அரைநாள் மட்டும் குடிதண்ணீருக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாங்க. ஆனால், இப்படி விவசாயம் பார்க்கிற அளவுக்கு 5 வருஷம் கழிச்சு இப்போதான் தண்ணீர் வருது" என்று ஆனந்த கூத்தாடுகிறார்கள் விவசாயிகள். 

அமரவதி ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்யும் ஆட்சியர்

மண்மங்கலம் வட்டம் பெரியாண்டான்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் வாங்கல் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஆகிய பகுதிகளில் உபரி நீர் வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுபற்றி, கரூர் விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

"அமராவதி அணையிலிருந்து தண்ணீர்; திறந்துவிடப்பட்டுள்ளதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியாண்டான்கோயில் மற்றும் வாங்கல் பகுதிகளில் உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. 5 வருஷம் கழிச்சு இப்போதான் இப்படி தண்ணீர் வருது. அமராவதி ஆற்றை நம்பி 30,000 ஏக்கர் நிலங்கள் தரிசா கிடந்தன. அமராவதி ஆறு காவிரியில் கலக்கும் திருமுக்கூடலூர் வரை நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் தரிசா கிடந்தன. ஆனால், இந்த வருடம் கர்நாடகாவிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும் நல்ல மழை பொழிந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் வரவைத்துவிட்டது. அஞ்சு வருடம் கழிச்சு நாங்க விவசாயம் பார்க்கப் போறோம்ன்னு நெனச்சாலே மகிழ்ச்சியா இருக்கு. கால்நடைகளுக்குத் தண்ணீர் இன்றியும் குளம், குட்டை, ஏரிகளெல்லாம் வறண்டு கிடந்தன. அத்தனை நீர்நிலைகளிலும் அமராவதி ஆற்று தண்ணீர் மூலம் நிரப்ப முடியும்.

விவசாயத்தைச் செழிப்பா செய்ய முடியும். நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போய், குடிக்கவே தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வந்தோம். இப்போ நிலத்தடி நீரும் உயர்ந்து குடிக்கத் தண்ணீர் கிடைக்கும். எல்லாவற்றையும்விட நீண்ட வருடம் கழித்து அமராவதி ஆற்றில் ஆடி 18 விழாவை விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கோலாகலமாகக் கொண்டாட இருக்கிறோம்" என்றார்கள் மகிழ்ச்சியாக!. அமராவதி ஆற்றுக் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.