வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (19/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (20/07/2018)

மயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா? - பிரச்னையும் தீர்வும்

இந்தப் பூமியில் ஓர் உயிரினம் எப்படி அழிவது பிரச்னையோ, அதைப்போலத்தான் ஓர் உயிரினம் அதிகமாக பல்கிப் பெருகுவதும். அரவக்குறிச்சியில் மயில்கள் பெருகுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னையே அதற்கு உதாரணம்.

மயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா? - பிரச்னையும் தீர்வும்

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துள்ளதால் காவிரி பாயும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் காவிரி பாய்ந்தாலும் அதனால் அரவக்குறிச்சிப் பகுதி விவசாயிகளுக்கு யாதொரு பயனும் இல்லை. ஏனென்றால், அரவக்குறிச்சிப் பகுதியில் உள்ள 30,000 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் மேட்டுப்பாங்கான மானாவாரி நிலங்கள். கிணற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் மூலம் இங்கே விவசாயம் நடைபெறுகிறது. தண்ணீருக்குக்கூட இங்கே விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை. ஆனால், நமது நாட்டின் தேசியப் பறவையான மயில்கள் ஏராளமாகப் பெருகிக்கொண்டிருப்பதுதான் பிரச்னை

 மயில்கள்

``இந்தப் பகுதியில் பயிர்களைக் கொத்தி நாசம் பண்ணுவதால் மோசமான விளைச்சலே கிடைக்கிறது. தேசியப் பறவை என்பதால் மயில்களின் பெருக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. இந்தப் பிரச்னையை இப்போதைய கரூர் எம்.பி தம்பிதுரை, 'அருகில் உள்ள ரங்கமலையில் மயில்களின் சரணாலயம் அமைக்கப்படும்'ன்னு தேர்தல் வாக்குறுதியா சொன்னார். ஆனால், சொன்னபடி செய்யலை. நாங்க அவஸ்தைப்படுறோம்" என்று கண்ணீர் வடிக்கிறார்கள் ஆயிரக்கணக்கான விவசாயிகள். 

இதுபற்றி அந்தப் பகுதி விவசாயிகளிடம் பேசினோம். ``இங்கே பெருவாரியான நிலங்கள் மானாவாரி நிலங்கள்தான். கிணற்றுப்பாசனம், ஏரிப்பாசனம் மூலமாகத்தான் விவசாயம் பண்றோம். இங்கே முருங்கை அதிகம் பயிரிடுறோம். இதைத்தவிர, நிலக்கடலை, சோளம், கம்பு, தக்காளி, மிளகாய், கத்திரின்னு பல பயிர்களையும் பயிர் செய்றோம். இந்தப் பகுதி சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதால், மழைக்காலங்களில் அதிகம் மழையை ஈர்க்காத மண்ணாக இருக்கிறது. அதனால், மழைக்காலங்களில்கூட இங்கே குறைவான அளவே மழை பெய்யும். அதோடு, இங்கே கல்குவாரிகள் அதிகம் இயங்குவதால், நிலத்தடி நீர் 900 அடிக்குக் கீழே போயிடுச்சு. பள்ளப்பட்டி பகுதியில் ஒரு இடத்துல 1200 அடியில் போர் போட்டும் தண்ணீர் வரலை. அப்புறம் இந்த இடங்களில் கிணறு வெட்டுவது எப்படி சாத்தியமாகும்? இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கிற சொற்ப தண்ணீரை வைத்துக்கொண்டு, வயலில் வெள்ளாமை பண்றோம். அதுக்கு மயில்கள் ரூபத்துல பிரச்னை வருது. பத்து வருடங்களுக்கு முன்பு இவ்வளவு மயில்கள் இல்லை. ஓரிரெண்டு மயில்கள் ஆங்காங்கே தென்படும். ஆனால், இப்ப எங்க பார்த்தாலும் நூற்றுக்கணக்கில் மயில்கள் இருக்கு. அப்படியே கூட்டமா வரும் மயில்கள், நாங்க போட்டுருக்கிற வெள்ளாமை முச்சூடையும் குதறி தின்னுட்டுப் போயிடும். விரட்டி அடிச்சாலும் எங்களுக்கு போக்குக் காட்டிட்டுப் பயிர்களை நாசம் பண்ணிட்டு போயிடுதுங்க. இதனால், எங்க வெள்ளாமை சுத்தமா படுத்துடுது. கால்வாசிகூட தேறுறதில்லை. கடந்த ஐந்து வருடங்களாக இப்படி மயில்கள் தொல்லையால் அல்லாடி வருகிறோம். பயிர்களுக்குத் தொல்லை தர்ற எலிகளைக் கிட்டி வைத்து புடிச்சுடுறோம். பூச்சிகளை மருந்து தெளிச்சு அழிச்சுர்றோம். ஆனால், மயில் தேசியப் பறவைங்கிறதால், அதை எங்களால் அழிக்க முடியலை. அப்படியே கோபப்பட்டு ஓரெண்டு பேர் மயில்களைக் கொன்றாலும், போலீஸ் வந்து புடிச்சுட்டுப் போயிடுது. எங்க பயிர்களை அழிக்கும் மயில்களை அழிக்கிறது எங்க நோக்கமில்லைங்க. இப்படி கணக்குவழக்கில்லாமல் சமீப காலங்களாக பெருகிக்கொண்டிருக்கும் மயில்களைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, இந்த மானாவாரி நிலங்களை நம்பி இருக்கும் எங்களின் நிலைமையும் மானாவாரியா ஆயிடும்" என்றார்கள் சோகமாக.

ஆறுமுகம்அடுத்துப் பேசிய, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அரவக்குறிச்சி ஒன்றியத் தலைவர் ஆறுமுகம்,

 ``மயில்கள் இப்படி கணக்கற்றுப் பெருகுவதால், விவசாயிகள் படும் அவஸ்தை அதிகம். இந்த மயில்கள் அபரிதமா பெருகுகிற பிரச்னை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலா இருக்கு. கடந்த எம்.பி தேர்தலின்போது இங்கே ஒட்டுக்கேட்டு வந்த இப்போதையை கரூர் எம்.பி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் இந்த மயில்கள் பெருக்க பிரச்னையைக் கட்டுப்படுத்த ஏதாவது திட்டம் கொண்டு வரும்படி கோரிக்கை வைத்தோம். 'என்னை ஜெயிக்க வைத்தால், அருகில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஆயிரக்கணக்கான மீட்டர் உயரத்தில் உயர்ந்து நிற்கும் ரங்கமலையில் மயிலுக்குச் சரணாலயம் அமைத்து, அத்தனை மயில்களையும் அங்கே கொண்டு போக ஏற்பாடு செய்யப்படும். அதன்பிறகு, அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மயில்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது'ன்னு உத்தரவாதம் கொடுத்தார். நம்பி மக்கள் ஓட்டுப் போட்டு, அவரை ஜெயிக்க வச்சாங்க. அடுத்த எம்.பி தேர்தலே வரப் போவுது. தம்பிதுரை மயில்களைக் கட்டுப்படுத்துகிறதா சொன்ன வாக்குறுதியை காத்தோட காத்தா விட்டுட்டார். தம்பிதுரை சொன்னபடி மயில்களைக் கட்டுப்படுத்த ரங்கமலையில் மயில்கள் சரணாலயத்தை அமைக்க வேண்டும். இல்லைன்னா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரை இங்கே ஓட்டுக் கேட்டு வரவிடமாட்டோம்" என்றார் ஆக்ரோஷமாக.

இந்நிலையில், ``அரவக்குறிச்சிப் பகுதியில் மயில்கள் அபரிதமா பெருகியதற்கு இங்குள்ள விவசாயிகளும் ஒரு காரணம். தங்கள் வயல்களைச் சுற்றி இருந்த இட்டேரி என்கிற உயிர்வேலிகளை அழித்ததுதான் அதற்கு காரணம்" என்கிறார் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜசேகரன். தனது பள்ளி மாணவர்களோடு அரவக்குறிச்சிப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் இதை அவர் கண்டறிந்துள்ளார். அவரிடம் பேசினோம்.

ராஜசேகரன்``இந்தப் பூமியில் ஓர் உயிரினம் எப்படி அழிவது பிரச்னையோ, அதைப்போலத்தான் ஓர் உயிரினம் அதிகமாக பல்கிப் பெருகுவதும். அரவக்குறிச்சியில் மயில்கள் பெருகுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னையே அதற்கு உதாரணம். அங்குள்ள சில விவசாயிகளையும் சந்தித்துப் பேசினோம். மயில்களால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால் விவசாயத்தையே கைவிடும் கொடிய சூழலுக்கு ஆளாகி இருப்பதும் தெரிந்தது. சில மூத்த விவசாயிகளைச் சந்தித்துத்துப் பேசியபோதுதான், மயில்கள் பெருகுவதற்கு காரணம் புரிந்தது. மயில்கள் இப்படி கணக்கற்றுப் பெருகுவதற்குக் காரணம் இட்டேறி என்கிற உயிர்வேலிகளை நாம் அழித்ததுதான். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை இந்த இட்டேறி என்கிற உயிர்வேலிகள் நம் வயல்கள், தோட்டங்களைச் சுற்றி இருந்தன. இட்டேறி என்பது கொங்குநாட்டுச் சொல். இட்டேறி என்கிற உயிர்வேலி என்பது இருபுறமும் அடர்ந்த வேலி, நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித்தடம் உள்ளிட்ட அமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த இட்டேறி என்கிற உயிர்வேலியில் கள்ளி வகைகள், முள்ளுச் செடிகளுக்கு இடையே வேம்பு, மஞ்சகடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதோடை, ஆவாரம் போன்ற செடி வகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடி வகைகள் மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகளும் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாக விவசாய நிலங்களைக் காத்து வந்தன. அதோடு, இந்த உயிர்வேலியில் எண்ணற்ற உயினங்களும் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள், எலி வளைகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும் இலைக்குப்பைகளும் எப்போதும் இந்தப் பகுதியில் காணப்படுவதால் பகுதியில் எண்ணற்ற பூச்சியினங்களும் வாழ்ந்து வந்தன. இவற்றை உணவாகக் கொள்ள வண்டுகள், நண்டுகள், பாம்புகள், பாம்பரணை, உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், ஆமைகள் என்று பல உயிர்கள் வாழ்ந்தன. இந்த உயிர்களை உண்ணப் பாம்புகள், பருந்துகள், நரிகள் போன்ற உயிர்கள் இருந்தன. இந்த உயிர்வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் ஆகியவை சேர்ந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் பல்வேறு வகை பூச்சிகளை அழித்தன. பாம்புகள், ஆந்தைகள் போன்ற உயிரினங்கள் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையைப் பாம்புகளும் வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின. அவற்றில் முக்கியமானவை குள்ளநரிகள். இந்தக் குள்ளநரிகள் மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக் கொள்ளும்போது, மயில்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தன. ஆனால், மயில்களின் எதிரிகளான குள்ளநரிகளையும், காட்டுப்பூனைகளையும் இப்போது காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. அதனால், மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. பழையபடி வயல்களைச் சுற்றி உயிர்வேலிகளை விவசாயிகள் அமைக்க வேண்டும்" என்றார்.

இதுபற்றி தம்பிதுரை தரப்பில் பேசினால்,  ``ரங்கமலை ரிசர்வ் ஃபாரஸ்ட் டிப்பார்ட்மென்ட் கன்ட்ரோலில் உள்ளது. அதனால் அவர்கள் அங்கே மயில்கள் சரணாலயத்தை அமைக்க அனுமதி தரலை. மாற்றுப் பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க முடியுமான்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க" என்றார்கள்.

 விவசாயம் இங்கே அழிவதற்குள் யோசித்து முடித்தால் நல்லது.


டிரெண்டிங் @ விகடன்