தொடர் மழை காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிப்பு! | Police ban tourist entry to Megamalai

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (19/07/2018)

கடைசி தொடர்பு:20:41 (19/07/2018)

தொடர் மழை காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிப்பு!

தொடர் மழை காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிப்பு.!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கு, வாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், மேகமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது மாவட்ட காவல்துறை.

மேகமலை

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக கேரளாவில் மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மேகமலைப் பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தென்பழனி முதல் ஹைவேவிஸ் வரையிலான சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறி சுற்றுலாப் பயணிகள் மேகமலை செல்லத் தடை விதித்துள்ளது மாவட்ட காவல்துறை. இதற்கான அறிவிப்பு தென்பழனி சோதனைச் சாவடியில் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

மேகமலை

இதை ஏற்று வனத்துறையும் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவருகின்றனர். மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, ``மழை தொடர்வதால் சில இடங்களில் மரங்கள் சாய்துள்ளன. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மறு உத்தரவிடும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மேகமலைக்கு வர வேண்டாம்" என்றனர்.