ஈரோட்டில் 8 மாதங்களுக்கு முன் மாயமான 85 வயது மூதாட்டி தேனியில் மீட்பு!

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 85 வயது மூதாட்டியை மீட்டு அவரின் உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மூதாட்டி பார்வதி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 85). இவர் தன் மகள் வீட்டிலிருந்து எட்டு மாதங்களுக்கு முன்னர் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர் இறந்துவிட்டதாகவே கருதியுள்ளனர். இந்நிலையில், தேனி புதிய பேருந்துநிலையம் அருகில் சுற்றித்திரிந்த பார்வதியைப் பார்த்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அந்த மூதாட்டி குறித்து மகளிர் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

இராமலெட்சுமி

அவர்கள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த பார்வதி என்பது தெரியவந்தது. உடனே தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. கொடுமுடி காவல் நிலையத்துக்கு அத்தகவல் தெரிவிக்கப்பட்டு, பார்வதியின் உறவினர்களை தேனி வரவழைத்தனர். எட்டு மாதங்கள் ஆன பின்னர் உறவினர்களை கண்ட பார்வதி கண் கலங்கினார்.

இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இராமலெட்சுமியிடம் பேசிய போது, "மாவட்ட எஸ்.பி தான் மூதாட்டி குறித்து தகவல் தெரிவித்தார். உடனே மூதாட்டியை மீட்டு குளிக்க வைத்து, சாப்பாடு வாங்கிக்கொடுத்து, ஈரோடு எஸ்.பி அலுவலகம் மூலமாக மூதாட்டியின் உறவினர்களைத் தொடர்புகொண்டு வரச் சொன்னோம். மூதாட்டியின் மகள், மகன், மருமகன் ஆகியோர் இன்று காலை வந்தனர். அவர்களிடம் மூதாட்டியை ஒப்படைத்தோம். அனைவரையும், எங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்று பேருந்து ஏற்றி அனுப்பியது மன திருப்தியாக இருந்தது" என்றார்.

குடும்பத்தினருடன் மூதாட்டி பார்வதி

"எங்கெங்கோ தேடிப்பார்த்தோம். எங்கும் காணவில்லை. இறுதியில் இறந்துவிட்டார் என்று நினைத்து குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தோம். தேனியில் கண்டுபிடித்தது, அதுவும் போலீஸார் மீட்டு கொடுத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது" என மூதாட்டியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!