மக்களை அச்சுறுத்தும் வன விலங்குகள்! - அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் நுழைந்து அச்சுறுத்துவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். 

வன விலங்குகள் அச்சுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது அருகில் இருக்கும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்துச் செல்கின்றன. அவற்றை வனத்துறையினரின் உதவியுடன் கூண்டு வைத்துப் பிடித்து அல்லது காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மலையோர கிராமமான பெத்தான்பிள்ளை குடியிருப்புப் பகுதியில் கடந்த சில தினங்களாகச் சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த இரு தினங்களில் அங்குள்ள நான்கு நாய்களை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. அத்துடன், சாலையில் சென்றவர்களைக் கரடி வழிமறித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் சாலை வழியாகச் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். விவசாயிகளும் தங்களின் விளை நிலங்களுக்குச் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை பகுதியில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டமாக வந்த யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, மா, பலா, பாக்கு உள்ளிட்ட பயிர்களை அழித்து சேதப்படுத்தின. அந்தச் சோகம் மறைவதற்கு முன்பாக மீண்டும் யானைகள் தொல்லை தரத் தொடங்கியுள்ளன. கடந்த இரு தினங்களாக ஒச்சாநடை, பருத்திக்காடு செவல், பெருசாபள்ளி பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. 

யானைகள் அட்டகாசம்

வடகரையைச் சேர்ந்த தீதார் என்பவரின் வாழைத் தோட்டத்தில் நுழைந்து துவம்சம் செய்த யானைக் கூட்டம், அங்கிருந்த தென்னை மரங்களையும் கீழே சாய்த்தன. முகமது உசேன் என்பவரின் தோட்டத்தில் 500 வாழை, 15 பாக்கு மரங்களை அழித்தன. இஸ்மாயில், முருகையா ஆகியோரின் வாழைத் தோட்டத்தையும் யானைகள் சேதப்படுத்தின. யானைக் கூட்டம் வலம் வருவதால் விவசாயிகளால் பகல் நேரங்களில்கூட விளை நிலத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!