அண்ணா ஸ்டேடியத்தில் அபாய பயிற்சி: ஆபத்துக்கு முன் விழிக்குமா விளையாட்டுத்துறை? | sports department should enforce the safety of the players in nellai anna stadium urges activists

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (19/07/2018)

அண்ணா ஸ்டேடியத்தில் அபாய பயிற்சி: ஆபத்துக்கு முன் விழிக்குமா விளையாட்டுத்துறை?

நெல்லையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவ, மாணவியருக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதால் அபாய பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அபாய பயிற்சி

நெல்லை பாளையங்கோட்டையில் ஆயுதப்படை சாலையில் கடந்த 1978-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் சர்வதேச தரத்தில் ரூ.3.40 கோடி செலவில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹாக்கி செயற்கை இழை மைதானம் உள்ளது. 

அத்துடன் மேற்கூரையுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், மின்னொளியில் போட்டிகள் நடத்தும் வகையில் மின்னொளி கைப்பந்து மைதானம், இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், செயற்கை இழை டென்னிஸ் மைதானம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான இடம் உள்ளது. 

இங்குள்ள மைதானங்களில் தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளுக்கான பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். இங்கு விளையாட்டு விடுதி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். சர்வதேச தரத்துடன் கூடிய இந்த மைதானத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசுத் துறை சார்பில் மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளும் ஆண்டுமுழுவதும் நடத்தப்படுகின்றன. 

பாதுகாப்பற்ற பயிற்சி

ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, உயரம் தாண்டும் போட்டிக்கான பயிற்சியின்போது, அதில் பங்கேற்பவர்கள் குதிக்கையில் உடலில் அடிபடாமல் இருக்க மெத்தை போன்ற விரிப்பு போடப்படும். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அந்த விரிப்பு கிழிந்து போனதால் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. அதில் பயிற்சி மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு உடலில் அடிபடும் ஆபத்து உள்ளது. 

அதனால் மைதானத்தில் பயிற்சிக்கான உபகரணங்களில் போதிய அளவுக்கு பாதுகாப்புக்கு உத்திரவாதம் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். ஏற்கெனவே பேரிடர் பயிற்சியின்போது கோவை மாணவிக்கு நிகழ்ந்தது போன்ற துன்பம் நெல்லையில் ஏற்பட்டு விடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.