''இறைவனை வழிபட மனத் தூய்மைதானே முக்கியம்...?'' - மாதர்சங்கம் கேள்வி

கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், 'அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட அரசு ஆதரவாகவே உள்ளது' என்று கூறியுள்ளார். ஆனாலும், தேவசம் போர்டு, `பெண்களை சபரிமலைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது' என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருகிறது.

''இறைவனை வழிபட மனத் தூய்மைதானே முக்கியம்...?'' - மாதர்சங்கம் கேள்வி

'சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லலாமா... கூடாதா' என்ற சர்ச்சைக் குறித்த வாக்குவாதங்கள் மறுபடியும் எழுந்துள்ளன. 

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தமானது. நாடு முழுவதிலுமுள்ள ஐயப்ப பக்தர்கள் வருடம்தோறும் விரதம் இருந்து இக்கோவிலுக்குச் சென்றுவருகின்றனர். ஆனாலும், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண் பக்தர்கள் மட்டும் கோயிலுக்குள் நுழைய நீண்டகாலத் தடை இருந்துவருகிறது. இந்நிலையில், இந்தத் தடையை நீக்கக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

இவ்வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, ``ஆண்களைப்போல் பெண்களும் கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட உரிமை உள்ளது. இதுதொடர்பாகச் சட்டம் எதுவும் இல்லாதபட்சத்தில் பெண்களுக்கு மட்டும் பாகுபாடு பார்ப்பது கூடாது. `கோயிலுக்குள் சென்று வழிபட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது' என்று அரசியல் சாசனத்தின் 25 மற்றும் 26 வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், 'அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட அரசு ஆதரவாகவே உள்ளது' என்று கூறியுள்ளார். ஆனாலும், தேவசம் போர்டு, `பெண்களை சபரிமலைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது' என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருகிறது.

சபரிமலை வழிப்பாடு - மாதர் சங்கம் கோரிக்கை

இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி, இது குறித்துப் பேசியபோது, ``உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. `அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழ்நாடு சட்டம் மட்டும்தான் இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை முதன்முதலாக நடைமுறைப்படுத்தியது கேரள அரசாங்கம்தான். அந்தவகையில், 'சபரிமலை கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்று கேரள அரசிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடமும் இதுகுறித்து கோரிக்கை வைத்தோம். 'பார்ப்பனரல்லாதோரையும் அர்ச்சகர்களாக நியமித்ததுபோல், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உரிமையையும் கேரள அரசு பெற்றுத்தந்து முன்மாதிரி மாநிலமாக விளங்கும்' என்று உறுதியளித்தார். உச்ச நீதிமன்றத்திலும் அதே உறுதியுடன் கேரள அரசு வாதாடி வருகிறது. எனவே, நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என்றே நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்களைக் கோயிலினுள் அனுமதிக்காததற்கு, 'மாதவிடாய் எனும் இயற்கையான உடலியக்க செயற்பாட்டைத்தான் காரணமாகக் கூறுகிறார்கள்'. அதாவது, தூய்மையைக் கருத்திற்கொண்டே பெண்களின் அனுமதி மறுக்கப்படுகிறது என்கிறார்கள். இறைவனை வழிபட மனத்தூய்மைதானே முக்கியம்.

மாதவிடாய் என்பது உடல் ரீதியாக ஏற்படும் இயற்கையான மாற்றம்தான் என்பதை முதலில் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயல்பான மாற்றத்தை, மதத்தோடு இணைத்து ஒருதலைபட்சமாகப் பெண்கள்மீது தடை விதித்ததனாலேயே அவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஆண்டாண்டு காலமாக இது நடைமுறையில் இருந்து வருகிறதென்பதே வேதனையானது. ஆனாலும் மாற்றம் என்பதே மாறாதது என்பதுபோல், நிச்சயம் நல்லதொரு மாற்றம் வரும். 

ஏனெனில், இயற்கையாக ஓர் உயிர் உருவாகும் உன்னத செயல்பாட்டையே, தீட்டு எனக் காரணம் கூறி ஒதுக்குவதென்பது இயற்கையையே அவமதிப்பது போன்றது. ஏற்கெனவே மதரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்கள், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உரிமை பெற்றவர்களாக தன்னம்பிக்கையோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வியத்தகு சாதனைகளையும் படைத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த வழக்கிலும் நிச்சயம் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். கோயிலுக்குள் சென்று ஐயப்பனை வழிபட வழி கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.

நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என நம்புவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!