`பறிபோன சொத்து மீண்டும் திருப்போரூர் முருகனுக்கே வந்தது!’ அறநிலையத் துறையின் அதிரடியால் மீட்பு

திருப்போரூர் கோயில் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள கந்தசாமி திருக்கோயில் இந்து அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாகத் திருப்போரூர் பகுதியில் 2.51 ஏக்கர் நிலம் (சர்வே எண் 239/1) முறைகேடாகத் தனியார் நிறுவனம் ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வருவாய்த் துறையின் ‘அ’ பதிவேட்டில் வள்ளி தேவஸ்தானம் (பட்டா எண் 3) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து, தனிநபர் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரிலும் போலியாகப் பட்டா பெற்றுள்ளனர். போலியாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட அந்த இடத்தின் ‘அ’ பதிவேட்டில் கந்த சுவாமியார் சேர்ந்த வள்ளியம்மன் கோயில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலமோசடி கோயில் நிர்வாகத்துக்குத் தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தின் பெயரில் இருந்த பட்டாவை செங்கல்பட்டு கோட்டாட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

வருவாய்த்துறையின் மூலம் நடந்த முறைகேட்டை, இந்து அறநிலையத்துறையின் அதிரடி அம்பலப்படுத்தி இருக்கிறது. மேலும், அந்த நிலத்தை மீண்டும் வேறொருவர் பட்டா மாற்றம் செய்யாத வகையில், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் மீண்டும் திருப்போரூர் முருகன் கோயிலின் பெயருக்கே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தத் தனியார் நிறுவனத்திடமிருந்து நிலத்தை வாங்கியவர்கள் என்ன செய்வதென்று யோசித்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!