``நான் சொன்னால் அமைச்சர்கள் கேட்பார்கள்!" மோசடி வழக்கில் சிக்கிய அ.தி.மு.க நிர்வாகி

குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ``தவறு செய்தவர்களுக்குத் தண்டனை உறுதி. விசாரணையில் ரவிச்சந்திரன் மீது தவறு இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்து முடித்துக்கொண்டனர்.

அ.தி.மு.க இணையதளப் பொறுப்பாளர்களுக்கு இது போதாத காலம்போல. பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஹரி பிரபாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனை மோசடி வழக்கில் போலீஸார் கைது செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க மாவட்ட நிர்வாகி

திருச்சி பாலக்கரை படையாச்சித் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்த ஆர்.மனோகரன் மூலம் அரசியலுக்குள் நுழைந்த இவர், நாளடைவில் வெல்லமண்டி நடராஜன் அமைச்சர் ஆனதும் அணி மாறினார். இடையில் தினகரன் அணிக்குச் சென்றவர், மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதைத் தொடர்ந்து, திருச்சி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்து வரும் இவர், சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடிசெய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலைச் சந்தித்து,  ரவிசந்திரன் மீது புகார் அளித்தனர். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு திருச்சி செயலாளர் ரவிச்சந்திரன் தங்களை ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரன், ``நடப்பது நம்ம ஆட்சி. அமைச்சர்கள் நான் சொல்வதைக் கேட்பார்கள். எந்த வேலையானாலும் வாங்கித் தருகிறேன். எல்லாத்துக்கும் விலை உண்டு. நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும், உடனே வேலை. அந்தளவுக்கு அமைச்சர் முதல் அனைவரும் எனக்கு நெருக்கம்" எனக் கூறியது தெரியவந்தது. மேலும், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த பலரிடம் இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணம் வாங்கியது உறுதிசெய்யப்பட்டது.

அதிமுக நிர்வாகி, மோசடி

மொத்தம் 11 பேரிடம் ரூ.63 லட்சம்வரை வாங்கிய ரவிச்சந்திரன், அவர்களை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரின் தந்தை கோபால், இதற்கு உடந்தையாகச் செயல்பட்டதும் அம்பலமானது. தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள், ஆளும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளராக இருப்பதால் நம்பி, பணம் கொடுத்துள்ளனர். அதோடு சரி, அடுத்து தேர்தலைக் காரணம் காட்டி, பணம் வாங்கியவர்களிடம் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார் ரவிச்சந்திரன். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர்கள், தங்களின் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோதிலும், தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளார் அவர். மூன்று வருடம் ஆன நிலையிலும் பணம் கொடுத்தவர்களுக்கு, வேலைக்கான எந்த அறிகுறியும் இல்லை. பணம் கொடுத்தவர்கள், பணத்தைத் திரும்பிக் கேட்டபோது, ``பணம் எல்லாம் கொடுக்க முடியாது. தொடர்ந்து பணம் கேட்டால், நடப்பதே வேறு" என்றுகூறி மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீஸார் ரவிச்சந்திரனை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளனர்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோருடன் ரவிச்சந்திரன் இருப்பது போன்ற புகைப்படங்களைக் காண்பித்து, ரவிச்சந்திரன் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. திருச்சி அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அ.தி.மு.க-வினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ``தவறு செய்தவர்களுக்குத் தண்டனை உறுதி. விசாரணையில் ரவிச்சந்திரன் மீது தவறு இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்து முடித்துக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!