கோஷ்டி மோதலால் அதிர்ந்த திருச்சி காங்கிரஸ் அலுவலகம்! - ஒருவருக்குக் காயம்

திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக, ப.சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியினர் கூட்டம் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி வருவதால் அக்கட்சிக்குள் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.சி.பாபு, முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வட்டாரத் தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருநாவுக்காரசருக்கு எதிராகக் கூட்டம் போடுவதாகத் தகவல் கிடைக்க, அங்கு சிட்டிங் மாவட்டத் தலைவர்களான ஜவஹர், கலை ஆகியோரின் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்கச் சொன்னதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

காங்கிரஸ்

கட்சி அலுவலகத்தில், கட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம் என முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தெரிவித்தனர். அதற்கு அனுமதிக்க முடியாது என தற்போதுள்ள பொறுப்பாளர்கள் கூறியதால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த காங்கிரஸாரும், போலீஸாரும் அங்கு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், ஒருவருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மோதல் தொடர்ந்து அதிகமானால் பெரிய பிரச்னை உண்டாகும் என்பதால், திருச்சி கோட்டைப் போலீஸார், இரு தரப்பினரையும் கலைத்ததுடன், எச்சரித்து அனுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!