`சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு! | CBI has been pressured to file a charge sheet

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:23:05 (19/07/2018)

`சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

`தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம்

கடந்த 2006-ம் ஆண்டு  காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் பதவி வகித்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தில் 3500கோடி முதலீடு செய்ய மேக்சிஸ் என்ற மலேசியாவை சேர்ந்த  நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், மேலும் இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பாதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கப்பிரிவும், ஏர்செல் மேக்சிஸ்க்கு முறைகேடாக பணம் வழங்கிய வழக்கை சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தன. இதனிடையே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஓபி சைனி முன்னிலையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், `எனக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோரி சிபிஐக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இதை நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்ப்பேன்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.