விளைச்சல் இல்லை! மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை!

கொத்தமல்லி விளைச்சல் மந்தமானதாலும், சந்தையில் உரிய விலை கிடைக்காததாலும் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் சாலையில் கொத்தமல்லியை கொட்டி, தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

விவசாயி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது எலுமலைநாயக்கன் பட்டி. இங்கு விவசாயம் பார்த்துவரும் சரவணக்குமார் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லியோடு தேவதானப்பட்டி சந்தைக்கு வந்தார். கொத்தமல்லிக்கு உரிய விலை கிடைக்காததால், வேதனையடைந்த அவர் தான் கொண்டுவந்த கொத்தமல்லி மூட்டையை அவிழ்த்து ரோட்டில் கொட்டினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இது தொடர்பாக சரவணக்குமார் நம்மிடம் பேசும் போது, ‘’கிணற்று பாசனத்தில் கொத்தமல்லி மற்றும் எள் பயிரிட்டுள்ளேன். கிணற்றில் போதிய நீர் இல்லை. எனவே, கொத்தமல்லிக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது. இதனால் செடியில் வளர்ச்சி இல்லை. விளைச்சலும் மந்தமானது. இதன் காரணமாக சந்தையில் கொத்தமல்லிக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள முத்துப்பிள்ளை குளம் விவசாயத்திற்கு ஆதாரம். ஆனால், அக்குளம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதால் கடந்த 15வருடத்திற்கு மேலாக குளத்தில் தண்ணீர் தேக்க முடியாக சூழல் நிலவுகிறது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர் வற்றி, கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் விவசாயமே இல்லாமல் போய்விடும். மாவட்ட நிர்வாகம் குளத்தை மீட்டு மீண்டும் தண்ணீர் தேக்க வழி செய்ய வேண்டும்’’ என்றார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!