`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாகச் சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி!

ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாகச் சொல்வது கற்பனை என்கிறார்கள் அர்ச்சகர்கள்.
 
ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம், ஶ்ரீ ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.  அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில், தலைமை அர்ச்சகர் முரளிதர பட்டர் தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய  முரளிதர பட்டர், "ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது; கண்டனத்துக்குரியது. இதனால், நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். நம்பெருமாள் சிலையை யாராலும் மாற்ற முடியாது.  மூலவர் சொர்ணபந்தனம் செய்யப்பட்டது என்பது உண்மை. அது நடக்கும்போது அர்ச்சகர்கள் அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்; உண்மையில், அர்ச்சகர்கள் அவரவர் முறை வரும்போது அனுமதிக்கப்பட்டனர்.

நம்பெருமாள் அணிந்துள்ள அங்கி மிகவும் பழமையானது. நம்பெருமாளை மாற்றி விடுவார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த அங்கி நம்பெருமாளுக்குப் பொருந்தவே பொருந்தாது. ஆகவேதான், மூலவரை மாற்றிவிட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு பொய்யானது என்று கூறுகிறோம். மேலும், மூலவருக்கு முக்கியமான பணிகளை, கைங்கர்யங்களைச் செய்துவரும் எங்களை மீறி மூலவரை மாற்றிவிட்டார்கள் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சக்கரத்தாழ்வார் சந்நிதி அருகே, புருஷோத்தோமன் பெருமாள் காணவில்லை என்பதும் தவறான வாதம். புருசோத்தமன் பெருமாள் சிலைக்கு பூஜைகள் நடந்துவருகின்றன. மூலவர் சிலை மாறுதல் அடைய வாய்ப்புக்கள் அதிகம். அதற்குக் காரணம் ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மூலவர் தைல காப்புடன் இருப்பார். அதனால், அவருடைய பழைய வேலைப்பாடுகள் அவ்வப்போது மாறும். ஆனால், அது போலி அல்ல. அதுமட்டுமல்லாமல், கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  2015 சம்ரோச்சணம் நடந்த போது பாலாலயம் செய்யப்படவே இல்லை. மூன்று சம்பவம் நடந்து, மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக பூஜைகளும் நடந்ததே தவிர பாலாலயம் செய்யப்படவே இல்லை. இது, அப்போதிருந்த அதிகாரிகளுக்கும் தெரிந்த ஒன்றுதான். சிலைகள் என்ற பொய் குற்றச்சாட்டை அரசு  தடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.

 

 

.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!