பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு!

வீடு கட்டுவதற்காக   நான்கு அடி அகலம் நான்கு அடி ஆழத்தில் தோண்டப்பட்ட  குழியில் விழுந்த பசு மாடு ஒன்றை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பசுவைக் காப்பாறியதோடு, அக்கறையாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறையினரை பொது மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பசு

தஞ்சாவூர் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில், வீடு கட்டுவதற்கு பில்லர் அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டிருந்தது. நான்கு அடி ஆழமும் நான்கு அடி அகலமும் கொண்ட இந்தக் குழியில், பசு மாடு ஒன்று தவறி விழுந்தது.  நான்கு அடியே அகலம் இருந்ததால் அசையக்கூட முடியாமல் பசு தவித்தது. இதைப் பார்த்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பசுவை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மடங்கிய படி விழுந்துகிடந்த பசுவை, அருகில் இருந்தவர்களின்  துணையோடு கயிறு கட்டி மேலே இழுத்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, குழியில் விழுந்த பசு மீட்கப்பட்டது.

அப்போது, அந்த இடத்தில் கூடியிருந்த பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சிறிது நேரம் மயங்கிய நிலையில் இருந்த பசு, பின்னர் கண் விழித்தது. அதுவரை அங்கு இருந்த தீயணைப்புத் துறையினர், மேலும் அடுத்தடுத்த குழிகளில் பசு விழாதபடி அந்த இடத்தைத் தாண்டி, கொண்டுவந்து விட்டனர். தீயணைப்புத் துறையினர் பசுவைக் காப்பாற்றியதோடு, அக்கறையுடன் செயல்பட்டதால் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!