வெளியிடப்பட்ட நேரம்: 07:13 (20/07/2018)

கடைசி தொடர்பு:13:35 (20/07/2018)

90 நாளைக்கு கெடாத டெட்ரா பேக் ஆவின் பால்... உண்மை என்ன?

90 நாளைக்கு கெடாத டெட்ரா பேக்  ஆவின் பால்... உண்மை என்ன?

ஆவின் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் பசும்பாலை டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் 30 கோடி ரூபாய்க்கு புதிய கருவிகள் வாங்கப்பட்டன. அதனை அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் ஒரு நாளைக்கு 1 லட்சம் லிட்டர் பால் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன. டப்பாவில் அடைக்கப்பட்ட பாலானது, 90 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் என்றும் ஆவின் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலின் விலை ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இந்த ஐடியா நிஜமாகவே புதியதுதானா? ஆவின் நிறுவனம் ஏற்கெனவே இந்த முறையில்தான் டப்பாக்களில் அடைத்து சிங்கப்பூருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதனால் இது ஒன்றும் புதிதானதல்ல.

ஆவின் பால்

 

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பால் பதனிடும் தொழிற்சாலையில், ஆவின் நிறுவனம் சார்பாக கொள்முதல் செய்யப்படும் பாலானது 139 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படும். பின்னர் பதப்படுத்தி 200 மி.லி, 500 மி.லி மற்றும் 1 லி என்ற அளவுகளில் டப்பாக்களில் அடைக்கப்படும். அதிநவீன முறையில் பதப்படுத்தப்படும் பால், சாதாரண வெப்பநிலையிலும் கெடாமல் இருக்கும். தமிழக சந்தைகளில் புதிதாக அறிமுகமாகும் டப்பா பாலை இருப்பு வைக்கக் குளிர்சாதன பெட்டிகள் தேவையில்லை. 

ஆவின் நிறுவன மேலாளர் சி. காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தற்போது நீண்டகாலமாகப் பாலை டப்பாக்களில் அடைப்பது பற்றி சோதனை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்திற்கு டப்பாக்களில் அடைக்கப்பட்டுள்ள அரை லிட்டர் பாலே போதுமானது. இதனைப் பயணத்தின்போது எங்கேயும் எடுத்துச் செல்லலாம். இதனை பெரும்பாலோனோர் ஏன் பசும்பால் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். ஆவின் அதிகமாகக் கொள்முதல் செய்யும் பாலில் மிகக் குறைந்த அளவில்தான் எருமைப்பால் இருக்கிறது. அதனால்தான் எருமைப்பாலை ஒதுக்கிவிட்டு, டப்பாக்களில் அடைக்கப்படும் பாலை பசும்பால் என்று சொல்கிறோம். ஏற்கெனவே, 180 நாள்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளும் படியான அடைப்புப் பெட்டிகளில் வைத்து விற்பனை செய்யும் பாலை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு அந்நாட்டிலும் நிலையான ஆதரவு கிடைத்துள்ளது. பசும்பாலைப்போல மற்ற பாலையும் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்ய இருக்கிறோம். அதோடு இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 90 நாள்கள் என்பதை நீடித்து, அதிக நாட்களுக்குக் கெடாமல் வைத்திருக்கும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவோம்" என்றார். 

பொன்னுச்சாமிஇதுபற்றி பேசிய பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, "இத்திட்டம் முன்பிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அவசரக் காலங்களில் மட்டுமே மக்கள் இதனைத் தேடுவார்கள். தனியார் நிறுவனங்களில் டப்பாக்களில் அடைத்த பாலானது சந்தையில் 3 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம்தான் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இப்போது சோழிங்கநல்லூரில் திறந்திருக்கும் ஆலைப் புதிதானது. ஆனால், அதைப் போன்ற ஆலை சேலத்தில் முன்னரே இருக்கிறது. இத்திட்டத்தை ஏதோ இப்போதுதான் அறிமுகப்படுத்துவதுபோல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை எப்படி புதியது என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றார். 

நடைமுறையில் இருக்கும் திட்டத்தை 'புதிய திட்டம்' என்று சொல்லி 'பழைய வீட்டிற்கு வெள்ளையடித்திருக்கிறார்கள்'


டிரெண்டிங் @ விகடன்