வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (20/07/2018)

கடைசி தொடர்பு:11:41 (20/07/2018)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டபதி ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித் திருவிழா இன்று (20.07.18) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறும். 

அய்யா வைகுண்டபதி ஆடித்திருவிழா


தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது, அய்யா வைகுண்டர் அவதாரபதி கோயில். சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோயிலுக்கும் வந்து செல்வது வழக்கம். இங்கு, 186-வது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழா, இன்று (20.07.18) காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும்.

கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 4.30 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பணிவிடையும்,            5.30-க்கு உகப்படிப்பும் நடைபெற்றது. கொடிப்பட்டம் திருக்கோயிலைச் சுற்றி ஒரு முறையும், கொடி மரத்தைச் சுற்றி 5 முறையும் வலம் வந்தது. பின்னர், 6.40 மணிக்கு கொடி மரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. 7.30  மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியைச் சுற்றி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும் நடைபெறுகிறது.

இத்திருவிழா நாள்களில், தினமும் மாலையில் புஷ்பவாகனம், அன்னவாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி பதியைச் சுற்றி பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், 11-ம் திருவிழாவான வரும் 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறும்.  இத்திருவிழா நாள்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க