வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (20/07/2018)

கடைசி தொடர்பு:20:05 (20/07/2018)

சிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன?

இதுல மாட்டினவங்க எல்லோரும், ஏழு, எட்டு வருஷமா இந்த அப்பார்மென்ட்ல இருக்கிறவங்களுக்குப் பழக்கமானவங்க.

சிறுமி பாலியல் வன்கொடுமை...  அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன?

ந்து மாதமாக ஒரு சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்திலேயும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வைத்து பாலியல் கொடுமை செய்ததாகப் பதினேழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த அப்பார்ட்மென்ட் அமைந்துள்ள பகுதி, நகருக்கு ஒதுக்குப்புறமான இடமோ, அக்கம் பக்கம் வீடுகளற்ற பகுதியோ, மனித நடமாட்டம் குறைவாக உள்ள இடமோ... அப்படி எதுவுமே இல்லை. எப்போதும் வாகன இரைச்சலுடன், அருகில் ஏராளமான கடைகளும் மிகுந்து காணப்படும் இடத்தில்தான் அமைந்திருக்கிறது. அப்படியிருக்க இந்தக் கொடூரச் சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? அதுவும் பகலில்தான் அந்தச் சிறுமியை அதிகம் துன்புறுத்தியிருக்கிறார்கள் என்றால், அப்பார்ட்மென்ட் அந்த அளவுக்கு மோசமான செயல் நடைபெறுவதற்கு இசைவானதாக இருந்ததா என்கிற கேள்வி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. நேரடியாக அந்த அப்பார்ட்மென்ட் இருக்கும் ஏரியாவுக்குச் சென்றேன். 

ஒருவழியாக அந்தக் கொடுமையான சம்பவம் நடந்த அப்பார்ட்மென்ட் இருக்கும் இடத்தை விசாரித்து, அங்கு சென்றடைந்தேன். அப்பார்ட்மென்ட் அருகில் இருந்த பூ வியாபாரி ஒருவர், ``அந்த கேஸ்ல மாட்னவங்கள்ல ஒருத்தர் எனக்குத் தெரிஞ்சவர்தாம்பா... பக்கத்துக் கடையிலதான் டெய்லி டீ சாப்டுவாப்ல... நாட்டு நடப்பெல்லாம் அவ்ளோ ஆவேசமாப் பேசுவாப்ல. என்னப்பா சொல்றது... இவனுங்களுக்கெல்லாம் சவுதி அரேபியால கொடுக்கிற மாதிரி தண்டனையைக் கொடுத்தாத்தான் சரியாவரும்" என்று கூறி சற்று இடைவெளி விட்டவர், ``பச்ச புள்ளப்பா.." என்று குரல் தழுதழுக்கக் கூறிவிட்டுப் பூக்களைக் கோக்கத் தொடங்கினார்.

அப்பார்ட்மென்ட் கேட் அருகே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் வெள்ளைத் தொப்பி அணிந்தபடி, இரும்புக் கதவைச் சுற்றி நின்றிருந்தார்கள். உள்ளே வருவோர், போவோர் அனைவரையும் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். வனப்பகுதிகளில் உள்ள செக் போஸ்ட் போன்ற சூழலை அது கண்முன் நிறுத்தியது. அவர்கள் அனைவருமே அதே அப்பார்ட்மென்டில் வசிக்கிறவர்கள்தாம். ``இனி யாரையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை" என்கிற முரட்டுத்தனம், அவர்களின் உடல்மொழியிலும், பேச்சிலும் தெரிந்தது. 

Parking - model photo

கொரியர் கொண்டு வந்த ஓர் இளைஞரும், நானும் உள்ளே போக வேண்டுமென அனுமதி கேட்டோம். கொரியர் நபரின் பையைப் பரிசோதித்துவிட்டு அவரை மட்டும் உள்ளே அனுப்பினார்கள். வெளியே இருந்த ஓர் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன், ``இதெல்லாம் கோடீஸ்வரனுங்க இருக்கிற அப்பார்ட்மென்ட். அவ்ளோ சீக்கிரம் வெளியாளுங்க உள்ளே போக முடியாது" என்றார். 

``அப்புறம் எப்படி இவ்ளோ பேர் உள்ள போயி... " என்றேன்.

``இதுல மாட்டினவங்க எல்லோரும், ஏழு, எட்டு வருஷமா இந்த அப்பார்மென்ட்ல இருக்கிறவங்களுக்குப் பழக்கமானவனுங்கதான். எல்லோரும் இவனுங்கள நம்பி வீடுவரைக்கும் விட்டுட்டாங்க. ஆனா, இப்போ என்னாச்சுப் பாத்தீங்களா" என்றார்.

``டெய்லி, இந்த அப்பார்மென்ட் வாசல்ல நின்னு, உள்ள இருக்கிறவங்கள சவாரி கூட்டிட்டுபோவேன். இவனுங்களால என் பொழைப்பே போச்சு. அப்பார்ட்மென்ட்ல இருக்கிற லேடிஸ், ஜென்ட்ஸ் எல்லாம் டெய்லி நம்மளப் பார்த்துச் சிரிப்பாங்க, நாலு வார்த்தைப் பேசுவாங்க. அந்தச் சம்பவத்துக்கு அப்புறம், பார்த்தும் பார்க்காத மாதிரி போறாங்க. ஆட்டோலகூட ஏற மாட்றாங்க.." என்றார்.

அந்தச் சிறுமியை முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியதாகச் சொல்லப்படும் முதியவரின் வீடு அப்பார்ட்மென்ட்-க்குப் பக்கத்தில்தான் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த வீடு எங்கே இருக்கிறது என்று அருகிலுள்ள செருப்புத் தைக்கும் முதியவரிடம் விசாரித்தபோது, ``நீங்க, அங்க போறதே வேஸ்ட், அந்த ஆளு இந்த கேஸ்ல மாட்ன உடனே, வீட்ல இருக்கிறவங்க ரொம்ப வெட்கப்பட்டுட்டு, வீட்ட பூட்டிட்டு எங்கயோ போயிட்டாங்க. பாவம் அந்தப் பசங்க அவங்க பொழப்பும் போச்சு. என் பொழப்பும் போச்சு" என்றார். 

``உங்க பொழப்பு எதனால?" என்றேன்.

``ரெண்டு நாளா போலீஸ்காரங்க, டி.வி-காரங்கன்னு, இங்க அப்படியே சூழ்ந்துக்கிறாங்க. இதுல செருப்புத் தைக்கறவங்கள யாரு கவனிக்கப்போறாங்க. அதனால என் பொழப்பும் போச்சு," என்றார்.

இந்த வழக்கில் சிக்கிய அனைவரின் குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் வீடுகளுக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் விமர்சனப் பேச்சால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அன்றாடத் தேவைகளுக்காக வெளியே போகத் தயங்குறார்கள் என்றும் தெரியவந்தது. 

அப்பார்ட்மென்ட்டுக்கு அருகே ஒரு போலீஸ் ஜீப், காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு காவலர்கள் மொபைலில் ஏதோ பார்த்தபடி இருந்தார்கள். அவர்களுக்கு அருகே மூன்று பேர் தனியாக நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் சில ஆவணங்கள் இருந்தன. அப்பார்ட்மென்ட்-க்குள் செல்வதற்காக அவர்கள் நீண்டநேரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. அவர்களில் ஒருவர், ``நான் ரிட்டையர்டு இன்ஸ்பெக்டர். அப்பார்ட்மென்ட்ல, இப்படி ஒரு சம்பவம் நடந்ததுக்கு அப்புறம், இந்தக் குடியிருப்புக்கு ஏற்கெனவே செக்யூரிட்டி வழங்கிக் கொண்டிருந்த கம்பெனிய அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் நிறுத்தி விட்டு, வெளியே போகச் சொல்லிட்டாங்க. பழைய செக்யூரிட்டிகள் யாரும் கிடையாது. இப்போ இருக்கறவங்கள எல்லாம் டெம்பரரியா போட்டு இருக்காங்க" என்றார்.

``ஓகே சார், அதுக்கும் நீங்க இங்க நின்னுகிட்டு இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்" என்றேன்.

"நான் ஒரு செக்யூரிட்டி கம்பெனி வெச்சு இருக்கேன். வேற ஒரு நிறுவனம், இந்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி ஆர்டர புடிக்கிறதுக்கு முன்னாடி, அது நமக்குக் கிடைச்சா நல்லா இருக்கும் பாருங்க. அதான் கொட்டேஷனோட வந்திருக்கேன்" என்று கூறிச் சிரித்தார். மூன்று பேரில் மற்ற இருவரும் இவரைப் போலவே இந்த அப்பார்ட்மென்ட்டில் அவரவர் நிறுவனங்களின் செக்யூரிட்டி சேவையை அளிக்கவே, அந்தப் பகுதியில் கொட்டேஷனோடு நின்று கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாகத் தெரியவந்தது. 

ஒரு கொடூரச் சம்பவம்.... எத்தனை விதமான மனிதர்களையும், பாதிப்புகளையும் அடையாளப்படுத்துகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் இந்தச் சம்பவம்.... 


டிரெண்டிங் @ விகடன்