`தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் செய்யவில்லை!' - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

மத்திய அரசுமீது கொண்டுவரப்பட இருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க அரசு ஆதரிக்குமா என்ற கேள்விக்கு, 'பி.ஜே.பி., தமிழகத்துக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் கூறியுள்ளார்.

கோவை குறிச்சிக்குளத்தில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை இன்று  தொடக்கிவைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, " தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை இந்த மூன்று ஆண்டுகளில் அண்ணன் எடப்பாடி தலைமையிலான அரசு கொடுத்துள்ளது. கோவைக்குப்  பல்வேறு திட்டங்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கிவருகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் திட்டமிட்டு ஒவ்வொரு திட்டத்தையும் விமர்சித்து வருகிறார்கள்.  உண்மையான சமூக ஆர்வலர்கள் அப்படிச் செய்வதில்லை. யார் எதிர்த்தாலும் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தியே தீருவோம்.

இங்கே, சேல்ஸ் டாக்ஸ் எப்படியோ அதேபோலத்தான் மத்தியில் வருமான வரித்துறை சோதனையும். இதுகுறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். வருமான வரித் துறை சோதனைகுறித்துப் பேச ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை.சர்க்காரியா ஊழலில் தி.மு.க சிக்கியதை யாரும் மறந்துவிட முடியாது. லண்டன் போய்விட்டு வந்து இப்படிப் பேசுகிறார். தமிழகத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் வெளியூர் சென்றுவிடுதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்'  என்றவரிடம், இறுதியாக காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசின்மீது கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்குமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ' பி.ஜே.பி., தமிழகத்துக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை. தி.மு.க-வும், காங்கிரஸும்தான் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் துரோகம் செய்தது என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!