வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (20/07/2018)

கடைசி தொடர்பு:15:05 (20/07/2018)

கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்... களத்தில் இறங்கிய இளைஞர்கள்!

நகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால் அமராவதி ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரையை இளைஞர்களே இறங்கி சுத்தம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் உள்ள அமராவதி அணையிலிருந்து பிரிந்து வருகிறது அமராவதி ஆறு. அங்கிருந்து 240 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாய்ந்து திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் இணைகிறது. இந்த ஆற்றின் வறட்சி காரணமாக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால், கரூர் மாவட்டத்தில் இந்த ஆற்றை நம்பி இருந்த 30,000 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் பார்க்கப்படாமல் தரிசாக போடப்பட்டன. இந்த வருடம் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அமராவதி அணையின் மொத்தக் கொள்ளளவான 90 அடியில் இதுவரை 86 அடி நிரம்பியுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் பாசனத்துக்காக 1,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், கரூர் நகரத்தையொட்டி புதுப்பாலம் அருகில் அமராவதி ஆறு முழுக்க ஆகாயத்தாமரை மண்டி, தண்ணீரை போகவிடாமல் தேக்கின. இதை அப்புறப்படுத்தும்படி கரூர் நகராட்சி அதிகாரிகளிடம் இந்தப் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் செவிசாய்க்காததால் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் தாங்களே களத்தில் இறங்கி ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி பேசிய அந்தப் பகுதி இளைஞர்கள், ``ஐந்து வருடம் கழிச்சு இப்போதான் அமராவதி ஆற்றில் தண்ணீர் வருது. எங்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியா இருக்கு. கரூர் நகரத்தின் குடிநீர் ஆதாரமே இந்த ஆற்றை நம்பிதான் இருக்கு. இந்தச் சூழலில், இந்த ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுதான் கரூரை வந்தடைந்தது. பல இடங்களில் ஆகாயத்தாமரை மண்டிக் கிடந்து, தண்ணீரே தேக்கியது. நேற்றிலிருந்து அதை அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால், நாங்களே திரண்டு போய் ஆற்றில் ஆகாயத்தாமரையை அகற்றினோம்" என்றார்கள்.