தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்துப் பொருள்கள் 25 நாள்களுக்குப் பின் அகற்றம் - மீனவர்கள் நிம்மதி! | Explosives removed after 25 days in thangachimadam

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (20/07/2018)

கடைசி தொடர்பு:15:42 (20/07/2018)

தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்துப் பொருள்கள் 25 நாள்களுக்குப் பின் அகற்றம் - மீனவர்கள் நிம்மதி!

ராமேஸ்வரம் அருகே கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருள்கள் நீண்ட இழுபறிக்குப் பின் சிவகங்கைக்குப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர்.

வெடிமருந்து


ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருக்குச் சொந்தமான வீடு அந்தோணியார்புரத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 25-ம் தேதி  மாலை இவரது வீட்டின் அருகே இருந்த கழிவு நீர் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக குழி தோண்டியுள்ளனர். அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து குழி தோண்டிய அவர்கள் அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்துள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இது குறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது  இயந்திரத் துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய 10,828 தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஏவுகணையில் பயன்படக்கூடிய வெடி பொருள்கள், நில கன்னிவெடிகள், ஒரே நேரத்தில் 15 டெட்டனேட்டர்களை வெடிக்கும் திறன் கொண்ட டைனமோ, வெடிகுண்டுகளை வெடிக்கப் பயன்படுத்தும் இரும்பு ஸ்லம்புகள், எச்சரிக்கை வெடிகள் என ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

மறுநாள் மதுரையிலிருந்து வந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிப்புக் குழுவினர் வெடிபொருள்கள் சிக்கிய பகுதிகளில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வேறு ஏதும் சிக்கவில்லை. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், இவற்றால் ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிய வெடிபொருள்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். மேலும், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஏவுகணையில் பொருத்தப்படும் பொறிகளான பியூஸை மட்டும் தனியாகப் பிரித்து பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றனர்.

இதன்பின் சென்னையிலிருந்து தங்கச்சிமடம் வந்திருந்த மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு கட்டுப்பாட்டு துணை இயக்குநர் பிரசாந்த் யாதவ், சேக்உசைன் ஆகியோர் கைப்பற்றப்பட்டிருந்த வெடிகுண்டு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதன்பின்னர் வெடிபொருள்களில் இருந்த வெடிமருந்து பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அப்போது குடியிருப்பு பகுதியில் வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருப்பதால் அவற்றை செயல் இழக்கச் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ், அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஏவுகணையில் பொறுத்தக்கூடிய பியூஸ் எனப்படும் வெடிமருந்துப் பொறி குறித்து தாங்கள் சான்று வழங்க இயலாது எனக் கூறிய அவர்கள், இதைத் தவிர மற்ற வெடி பொருள்களைச் செயல் இழக்கச் செய்ய உரிய அனுமதியை வழங்குவதாக கூறிச் சென்றனர்.

வெடிமருந்து

இதனால் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஏவுகணை பியூஸ்களை செயல் இழக்கச் செய்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்துகளுக்கு மத்தியில் வசிக்க அஞ்சிய எடிசன் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை அப்புறப்படுத்த நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று பகல் 12 மணியளவில் தங்கச்சிமடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துப் பொருள்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி கயல்விழி, ராமேஸ்வரம் நீதிபதி (பொறுப்பு) பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் மத்திய வெடிகுண்டு கட்டுப்பாட்டு அலுவலர் சேக் உசைன், ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஷ் உள்ளிட்ட போலீஸார் வெடிமருந்துப் பொருள்களை மரப்பெட்டி மற்றும் அட்டைப் பெட்டிகளில் பாதுகாப்புடன் அடுக்கினர். பின்னர் சீல் வைக்கப்பட்ட இவற்றை இதற்கென கயத்தாரிலிருந்து வந்திருந்த தனி வேனில் ஏற்றினர்.

10 பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட வெடிபொருள்கள் சிவகங்கை மாவட்டம் சக்கந்தி மருதுபாண்டியர் நகரில் உள்ள தமிழ்நாடு கனிமவள நிறுவனக் கிடங்குக்கு தங்கச்சிமடம் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான ஆயுதப்படை போலீஸாரின் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த 25 நாள்களாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துப் பொருள்களால் அச்சத்துடன் அப்பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் இன்று அவை அகற்றப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.