வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (20/07/2018)

கடைசி தொடர்பு:15:36 (20/07/2018)

ஆளுநர் சென்ற பின் குப்பையில் வீசப்பட்ட தூய்மை இந்தியா பிரசுரம்..!

புதுக்கோட்டையில் ஆளுநர் தூய்மை இந்தியா பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் சென்ற பின் தூய்மை இந்திய திட்டம் குறித்த விழிப்பு உணர்வு பிரசுரம் குப்பையில் வீசப்பட்டது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து, தூய்மை இந்தியா- வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அவரது ஆய்வுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, ஆளுநர் பங்கேற்கச் செல்லும் மாவட்டங்களில் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை திருச்சியிலிருந்து காரில் புதுக்கோட்டை வந்தார். அவருக்கு தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு, ரகுபதி உள்ளிட்ட தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டினர். 

முதலாவதாகப் பஸ் ஸ்டாண்டில் தூய்மைப் பணிகள் குறித்த விழிப்பு உணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், அப்பகுதியில் உள்ள குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தனர். கவர்னர் தூய்மைப் பணியை முடித்துவிட்டு கிளம்பி போன பின்பு தான் கூத்து அரங்கேறியது. தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்பு உணர்வு பிரசுரம் மக்களுக்கு கொடுத்தது போக மீதி இருந்தது. கவர்னர் சென்றவுடன் அதைக் குப்பையில், போட்டு சென்றுவிட்டனர். இதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அதைப் படம் பிடித்தனர். பின்னர் சுதாரித்துகொண்ட நகராட்சி அலுவலர்கள் ஊழியர்களை அவசர அவசரமாகப் பிரசுரத்தை அள்ளச் சொல்ல, அவர்களும் அவரச அவரசமாக அள்ளிக்கொண்டுப் போனார்கள்...