வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (20/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (20/07/2018)

`ஆகஸ்ட் 31 வரை பி.இ. கலந்தாய்வை நடத்தலாம்' - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

ஆகஸ்ட் 31 வரை பொறியியல் கலந்தாய்வை நடத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கலந்தாய்வு

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் இறுதிக்குள் இன்ஜினீயரிங் கவுன்சலிங்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால், கடந்த ஆண்டு, நீட் தேர்வின் முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வுக்குப் பின்பு ஜூலை இரண்டாவது வாரத்தில் இன்ஜினீயரிங் கவுன்சலிங் நடக்கும் என்று எதிர்பார்த்து, பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருந்தனர். ஆனால், ‘நீட்’ தேர்வில் தமிழ் கேள்வித்தாளில் பிழைகளுடன் கேள்விகள் கேட்கப்பட்ட விவகாரத்தில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

இதனால், மருத்துவக் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடர்ந்து தள்ளிப்போவதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை இறுதிக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, கூடுதல் அவகாசம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடந்தபோது, கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. அப்போது, ``ஆகஸ்ட் 31 வரை பி.இ. கலந்தாய்வை நடத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் கல்லூரி தொடங்கும் தேதியும் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க