`ஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 80 சதவிகிதம் நிறைவு!’ – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

``தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 20 நாள்களாக அமிலங்கள் வெளியேற்றும் பணி தொடர்ந்து  நடைபெற்று  வருகிறது. இதுவரையில் 80% பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 5 நாள்களில் முழுமையாக நிறைவடையும்” என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்குப் பிறகு கடந்த மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 16-ம் தேதி, ஆலையிலிருந்து கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. உடனே, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், கந்தக அமில சேமிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் டேங்கர் லாரிகளில் கந்த அமிலம் வெளியேற்றப்பட்டு, இவற்றை மூலப் பொருளாக கொண்டு செயல்படும் கம்பெனிகளுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆலையில் உள்ள மற்ற அமிலங்களின் இருப்பு நிலை குறித்து இக் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்படி, சேமிப்புக் கலன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மற்ற அமிலங்களை 30 நாள்களுக்குள் வெளியேற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 20 நாள்களாக கந்தக அமிலம் உள்ளிட்ட மற்ற பிற அமிலங்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் முடிவடைந்த பின்  செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 20  நாள்களில் 7,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம், 600 மெட்ரிக் டன் பாஸ்பாரிக் அமிலம், 25,000 மெட்ரிக் டன் ஜிப்சம், 8,000 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட், 60 மெட்ரிக் டன் சிலிசிக் அமிலம் என இதுவரை மொத்தம் 80% அமிலங்கள் வெளியேற்றும் பணி நிறைவடைந்துள்ளது. மீதம் உள்ள அமிலங்கள் இன்னும் 5 நாள்களில் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும்.

இதில், ஜிப்சம் மட்டும் அதிகமாக இருப்பு உள்ளதால் அவற்றை அகற்றக் கூடுதல் கால அவகாசம் ஆகும். மேலும், ஆலை வளாகத்தில் பசுமை வளையத்துக்குள் உள்ள செடிகளைப் பாதுகாப்பதற்காக மாநகராட்சி மூலம் தண்ணீர் வழங்கலாம் என ஆய்வுக்குழு  கூறியிருக்கிறது. இதனால், மாநகராட்சி மூலம் 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விலைக்கு கூடுதலாக 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்படும். ஆலைக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. அமிலம் வெளியேற்றப்படும் பணிகள், ஜெனரேட்டர் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகளுக்கான செலவுகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதைக் கண்காணிக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!