`நண்பர்களுடன் இணைந்து நகைகளைத் திருடிய நகைக்கடை ஊழியர்!’ - ஒரே நாளில் கண்டுபிடித்த போலீஸ்

நகைகளைத் திருடி, நண்பர்களோடு நாடகமாடிய நகைப்பட்டறை தொழிலாளி சரவணன் கைதான சம்பவம் காரைக்குடியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கைது செய்யப்பட்டவர்கள்


இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசியபோது ``சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சங்கர் திடலைச் சேர்ந்த  நகைப்பட்டறை தொழிலாளி சரவணன். இவர் நேற்று 750 கிராம் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு ஹால்மார்க் முத்திரை பதித்துக்கொண்டு வருவதற்காக காரைக்குடியிலிருந்து மதுரைக்குக் கிளம்பினார். அப்போது சங்கர் திடலுக்கு அருகில் வரும்போது, 4 மர்ம நபர்கள் அவரைப் பைக்கில் பின்தொடர்ந்து வந்து தாக்கிவிட்டு 750 கிராம் நகைகளைப் பறித்துச் சென்றனர். அதில், காயமடைந்த சரவணன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன், திருடர்களைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படையினர் சரவணனிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் கிடைத்தன. இவற்றால், சரவணன்தான் ஆள் வைத்து நகையை திருடியிருக்கிறார் என்பதை போலீஸார் முடிவு செய்தனர். மேலும், சரவணனுக்கு போலீஸார் கொடுத்த ட்ரீட்மென்ட்டில், அவர் படபடவென்று உண்மைகளைக் கூறியிருக்கிறார்.  ``நான் காரைக்குடியில் உள்ள தனியார் நகைக்கடையில் 17 வருஷமாக நம்பிக்கைக்குரிய தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். எனக்குக் கடன் தொல்லை அதிகமானது. அதிலிருந்து தப்பிக்கவே ஹால்மார்க் போடச் சொல்லி கடையிலிருந்து கொடுத்தனுப்பிய நகைகளைக் கொள்ளையடிக்க, எனது நண்பர்களான பேச்சிமுத்து, முருகன், சேட்டான் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டேன். போலீஸ் நம்ப வேண்டும் என்பதற்காக என் நண்பர்களே, பீர் பாட்டிலை உடைத்து என் கழுத்தில் குத்தினார்கள். நானும் சத்தம் போட்டுக்கொண்டு ஓடினேன். பொதுமக்கள் ஓடி வந்து, என்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி எங்கள் திட்டம் நிறைவேறியது. அதன்பிறகு, அந்த நகைகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம்’’ என்று போலீஸில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

ஒரே நாளில் நகைத் தொழிலாளி, நாடகமாடியதைக் கண்டுபிடித்து நகைகளை மீட்டெடுத்தனர். இதையடுத்து, காரைக்குடி தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன், க்ரைம் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் உள்ளிட்ட போலீஸாரை, டி.எஸ்.பி கார்த்திகேயன் பாராட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!