வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (20/07/2018)

கடைசி தொடர்பு:17:45 (20/07/2018)

``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்!"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஓ.பி.எஸ் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நாங்கள் சின்னம்மா அணியில் தொடர்ந்து நீடிக்கிறோம்.

``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்!

அ.தி.மு.கவின் மூன்று எம்.எல்.ஏ-க்களையும் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ``அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாம், எங்களை நோக்கி வரத்தான் போகிறார்கள்" என்கிறார் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உள்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இதில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களான விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. இதுகுறித்து இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ' அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பேட்டி அளித்தார். ' 18 எம்.எல்.ஏக்களுக்கு ஏற்பட்ட அதேநிலை, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் நேரும்' என அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 

`அ.ம.மு.கவில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே? 

`` என் மீதுள்ள பாசத்தில் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் அண்ணன் டி.டி.வி. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் உண்மையான அ.தி.மு.க-வினர் கிடையாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அ.தி.மு.க மூலமாகத்தான் எம்.எல்.ஏ ஆனேன். அம்மா இருந்தவரையில் என்னை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டார். இவர்கள் என்னுடைய தொகுதிக்கு எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. என் மீது நடவடிக்கை எடுக்க, இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. அ.தி.மு.கவில் இவர்கள் நீடிப்பார்களா என்பதற்குக் காலம் பதில் சொல்லும்." 

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன பிறகு, இன்னொரு கட்சிக்குள் பொறுப்பு வாங்குவது எந்த வகையில் சரியானது? 

`` நான் ஒன்றும் கட்சியைவிட்டுக் கட்சி மாறவில்லையே...அ.தி.மு.கவின் ஒரு பிரிவில்தானே இருக்கிறேன்." 

அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் ஒன்றா? 

`` ஆமாம். அம்மா இறந்த பிறகு அ.தி.மு.க இரண்டு அணியாகப் பிரிந்தது. சின்னம்மா தலைமையில் ஓர் அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும் பிரிந்தது. பின்னர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஓ.பி.எஸ் பக்கம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நாங்கள் சின்னம்மா அணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். எங்கள் அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயர் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது."

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபு

உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்? 

`` முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு எதிர்கொள்வதைப் பற்றிச் சொல்கிறேன்.'' 

டி.டி.வி அணியில் இருந்து வெளியே வந்துவிடுமாறு, உங்களுக்கு எதாவது அழைப்பு வந்ததா? 

`` ஆட்சியில் இருப்பவர்கள் கொடுத்தது எல்லாம் பொய்யான வாக்குறுதிகள்தான். என்னுடைய தொகுதிக்கு எந்த வேலையையும் செய்து கொடுக்கவில்லை. பொதுச் செயலாளராக சின்னம்மா இருந்தபோது, 'உங்கள் கோரிக்கைகளைச் சொல்லுங்கள்' என அனைத்து எம்.எல்.ஏ-க்களிடமும் கேட்டார். நாங்களும் கோரிக்கை மனுவைக் கொடுத்தோம். அதன் அடிப்படையில் என்னுடைய தொகுதிக்கு சில நல்ல விஷயங்கள் நடந்தன. என்றைக்கு எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் கட்சியைக் கைப்பற்றினார்களோ, அன்றில் இருந்து என்னுடைய தொகுதிக்கு எந்த வேலையும் நடக்கவில்லை. அவர்கள் சம்பாதிப்பதற்காகத்தான் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்போது 6,00,000 உறுப்பினர்கள் அ.தி.மு.கவை விட்டே போய்விட்டார்கள். அ.தி.மு.க, மீண்டும் சின்னம்மாவிடம் வந்து சேரும். டி.டி.வி அண்ணன் இந்தக் கட்சியை வழிநடத்துவார்.'' 

ஆர்.கே.நகர் என்ற ஒரு தொகுதியில் மட்டும் வென்ற டி.டி.வி தினகரன், அடுத்ததாக, '30 எம்.பி தொகுதிகளில் வெல்வேன்' என்கிறார். இது சாத்தியமா? 

`` எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்களுக்குப் பயனற்ற திட்டங்களை இவர்கள் கொண்டு வருகிறார்கள். இங்கு வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் உரிமைகளையே விற்றுவிட்டார்கள். எப்படிப்பட்ட தலைவி உட்கார்ந்த இடம் அது. இப்போது மத்திய அரசுக்குப் பயந்து கூனிக் குறுகிப் போய் உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல், ' மத்திய அரசை வலியுறுத்தி' என நோட்டீஸ் அடிக்கிறார்கள். இப்படியொரு ஆளுமையற்ற முதல்வர் தேவைதானா?". 

18 பேரும் தகுதிநீக்க வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். இதேநிலைதான், உங்களுக்கும் வந்து சேரும் என்பது டி.டி.விக்குத் தெரியாதா? பிறகு ஏன் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? 

`` தொகுதியைப் பார்த்துக்கொள்ளத்தான் அவர் நியமித்திருக்கிறார். அ.தி.மு.கவில் தலைமை மாறி வரும்போது, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பொறுப்பு போடப்பட்டுள்ளது. ' இன்னும் 100 ஆண்டுகளானாலும் அ.தி.மு.க வலுவோடு இயங்கும்' என அம்மா சொல்லிவிட்டுப் போனார். எடப்பாடியை மனதில் வைத்து இந்த வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் எல்லாம் விரைவில் தினகரனிடம் வந்து சேரத்தான் போகிறார்கள்.''