லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு!

நாடு முழுவதும் இன்று தொடங்கிய லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாகப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நெல்லையில் மட்டும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

லாரிகள் வேலை நிறுத்தம்

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசலுக்கான் விலைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி ஸ்டிரைக் தொடங்கியுள்ளது. 

இந்தக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதிலும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்று இருக்கின்றன. தமிழகம் முழுவதிலுமிருந்து 4.5 லட்சம் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 5,700 லாரிகள் இயக்கப்படவில்லை, நெல்லை மாவட்டப் பகுதிகளுக்குள் வந்த வெளிமாநில லாரிகளும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. 

காய்கனிச் சந்தைகளிலிருந்து உள்மாவட்டப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் பொருள்கள் எடுத்துச் செல்லப்படவில்லை. அதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் காய்கனிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதே சமயம் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் இயங்காததால், காய் கனிகள் சந்தையில் தேங்கிக் கிடக்கின்றன. அதேபோல மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயங்காததால் மீன்களும் தேக்கம் அடைந்துள்ளன. 

இந்தியா சிமென்ட் தொழிற்சாலை நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் ஏராளமான லாரிகளில் சிமென்ட் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலத்துக்கும் ஏற்றிச் செல்லப்பட்டு வந்த நிலையில், லாரி ஸ்டிரைக் காரணமாக அந்தப் பணிகள் முடங்கியுள்ளன. மொத்தத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!