`மோடியைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே முதல்வர் செயல்படுகிறார்!’ - விளாசும் திருமாவளவன்

திருமாவளவன்

சேலம் டு சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். இக்கூட்டத்துக்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

``இந்த எட்டு வழி பசுமைச் சாலை 1,000 ஏக்கர் காடுகளையும், 1,000 ஏக்கர் விளைநிலங்களையும், 8 மலைக் குன்றுகளையும் அழித்து போடப்பட இருக்கிறது. 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி 60 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்தத் திட்டம் ரத்து செய்ய வேண்டும். ஆனால், அந்தச் சட்டத்தைத் திருத்தி நிலம் கையகப்படுத்தி வருகிறார்கள். தற்போது எட்டு வழிச் சாலைக்கு 80 சதவிகித மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

குடியிருப்புகளைத் தாண்டி இயற்கையையும் அழித்து மோசமாக நடந்துகொள்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கைது செய்வதை, முதலில் கைவிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் எடுபிடியாக இருக்கிறார். அவர்களின் கட்டுப்பாட்டில் சிக்கி இருக்கிறார். ஆட்சி நிர்வாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்த முடியாமல் தவித்து வருவது வேதனை அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி, மோடியைத் திருப்திப்படுத்த மக்களை எதிர்த்து கருத்துகளைக் கூறி வருகிறார். தூத்துக்குடியில், ஜல்லிக்கட்டுக்கு மக்கள் தன் எழுச்சியாகப் போராடியதைப் போல எட்டு வழிச் சாலைக்கும் மக்கள் தன்னிச்சையாகப் போராடுவார்கள். அடுத்தகட்ட நடவடிக்கையாக தி.மு.க. உட்பட தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!