திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்: நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை!

திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்தால் வர்த்தகர்களுக்கும் பயணிகளுக்கும் பயன் உள்ளதாக அமையும் என வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு காய்கனிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், இந்த மார்க்கத்தில் போதுமான ரயில் போக்குவரத்து இல்லாததால் வணிகர்கள் சாலை மார்க்கத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியதிருக்கிறது. அதனால் திருவனந்தபுரத்திலிருந்து மங்களூர் செல்லும் ரயிலை நெல்லை வரையிலும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தினர் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்டத் தலைவரான கருங்கல் ஜார்ஜ் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், ``அடுத்த மாதம் ரயில் காலஅட்டவணை வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை, குமரி மாவட்ட மக்களின் வசதியை கவனத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், கோட்டார், வடசேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து கேரளாவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. 

கருங்கல் ஜார்ஜ்இதற்காக வணிகர்கள் ரயில் மார்க்கத்தைப் பயன்படுத்தும் வகையில் திருவனந்தபுரம் - மங்களுர் எக்ஸ்பிரஸ் ரயிலை (16347-16348) நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஏற்கெனவே திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு மூன்று இரவு நேர ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த ஒரு ரயிலை மட்டும் நெல்லை வரை நீட்டிப்பு செய்தால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் சரக்குகளை கேரளாவின் கடைசி எல்லையான காசர்கோடு வரை கொண்டு சென்று வணிகம் செய்ய முடியும். இதன் மூலம் ரயில்வே துறைக்கும் வருவாய் கிடைக்கும்.

அதேபோல, திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரக்கூடிய பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் நெல்லையிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு பகல் நேர பயணத்துக்கு வசதி ஏற்படும். இதன் மூலமாக நெல்லை, குமரி மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் மட்டுமல்லாமல் இரு மாவட்டங்களிலும் இருந்து அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கும் உதவியாக அமையும்.

அதனால் இந்தக் கோரிக்கைகளை மத்திய ரயில்வே துறை பரிசீலித்து, அடுத்த மாதம் வெளியாகவுள்ள புதிய கால அட்டவணையில் இந்த ரயில்களை இணைத்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!