வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (20/07/2018)

`நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம்!’ - அமைச்சர் உதயக்குமார் நம்பிக்கை

``சட்டமன்றத் தேர்தல் இப்போது வர வாய்ப்பே இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே வரும். அதில் நாங்கள் முழுமையான வெற்றி பெறுவோம்’’ என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர் பி உதயகுமார்

மக்களிடையே அ.தி.மு.க-வின் சாதனைகளை விளக்கவும் தொண்டர்களை அதிகப்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. காமராஜர் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு மதுரை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தப் பேரணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் 5-வது நாளான இன்று இந்த சைக்கிள் பேரணி நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் ``காவிரியில், எய்ம்ஸ் மருத்துவமனையில் என பல வெற்றிகளை முதல்வரும் துணை முதல்வரும் பெற்றுத் தந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் எங்கள் சாதனைகளை, மக்கள் முன் மறைத்து எங்களை கவிழ்க்கப் பார்க்கிறார்கள். அது ஒரு போதும் முடியாது. முக்கிய பிரமுகர்களின் கணக்குகளைக் கேட்பதற்கு வருமான வரி துறைக்கு உரிமை உண்டு. எனவே, கணக்கு கேட்பவர்களிடம் கணக்கு சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டு. இதற்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமில்லை. துணை முதல்வர் மீது அளவுக்கதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் சதி. சட்டமன்றத் தேர்தல் இப்போது வர வாய்ப்பே இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே வரும். அதில் நாங்கள் முழுமையான வெற்றி பெறுவோம்’’ எனத் தெரிவித்தார்.