வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (20/07/2018)

கடைசி தொடர்பு:20:52 (20/07/2018)

வெள்ள பாதிப்பைத் தடுக்க புதிய வழி... இணைக்கப்படும் சென்னை புறநகர் ஏரிகள்!

சென்னை புறநகர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதாள மூடு கால்வாய் வழியாக வெளியேற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

வெள்ள பாதிப்பைத் தடுக்க புதிய வழி... இணைக்கப்படும் சென்னை புறநகர் ஏரிகள்!

சென்னை மாநகரத்தின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரி, ஆதனூர், சிட்லப்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையில் மூழ்கின. கூடுவாஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் என அனைத்துத் தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன. சாலைகளில், வாகனங்கள்  ஒரு கிலோ மீட்டர் தொலைவு செல்வதற்கே பல மணிநேரம் ஆனது. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தரை தளத்தில் வசிப்பவர்கள் டிவி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டப் பொருள்களை இழக்க நேரிட்டது.

அடுக்குமாடிக் குடியிருப்பில், தரை தளத்தில் வசிப்பவர்கள் மேல்தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஒருவரையொருவர் தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு பெய்த மழையைவிட 2016-ம் ஆண்டு குறைந்த அளவே மழை பெய்தது. ஆனாலும், புறநகர் பகுதியில் இருப்பவர்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய்களும் காணாமல் போனதுதான் இந்த வெள்ளப் பாதிப்புகளுக்கு முதன்மையானக் காரணம். மக்கள் கொந்தளிப்பால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை புறநகர் மழை பாதிப்பு

சென்னையின் அசுர வளர்ச்சியால் புறநகர்ப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்யப்பட்ட பகுதிகள் யாவும் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், கால்வாய்கள் வழியாக மற்றொரு ஏரியைச் சென்றடையும். ஆனால், பெரும்பாலான கால்வாய்கள் தூர்ந்துபோன காரணத்தால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துவிடுகிறது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்புப் பகுதிகளில் செல்வதைத் தடுக்கும் வகையில் 86 கோடி ரூபாய் செலவில் பாதாள மூடு கால்வாய் அமைக்கும் பணியைத் தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்தப் பணிகள் மூலம் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 மழை காஞ்சிபுரம் மாவட்டம்

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர். அவர்களின் கடுமையான உழைப்பால் ஆக்கிரமிப்புகள் ஓரளவு அகற்றப்பட்டாலும், தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மேலும் மழைநீர் செல்லும் பாதைகளில் பட்டா நிலங்களும் சாலைகளும் இருப்பதால், பிரச்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் பாதாள மூடுகால்வாய் என்ற திட்டத்தைப் பொதுப்பணித்துறையினர் தயாரித்தனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்த 1,100 கோடி ரூபாய் செலவு ஆகும் எனத் திட்ட அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தற்போது 84 கோடி ரூபாய் மட்டுமே தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.

வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

இந்தத் திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி குஜராஜ் என்பவரிடம் பேசினோம். “தமிழகத்தில் மூடுகால்வாய் அமைப்பது இதுதான் முதல்முறை. இந்தக் கால்வாயில் மழைநீர் மட்டுமே செல்லும். சாக்கடை நீர் கலக்காதவாறு அமைக்கவுள்ளோம். அடைப்புகளைச் சுத்தம் செய்வதற்கு வழிகள் ஏற்படுத்தப்படும். பாதாள மூடுகால்வாய் திட்டத்தின்படி ஏரியிலிருந்து செல்லும் உபரிநீர், சாலையின் கீழ் பகுதியில் அமைக்கப்படும் மூடு கால்வாய்கள் (கட் அண்ட் கவர்) மூலம் மற்றொரு ஏரிக்குச் செல்லும். இதனால் 60 விழுக்காடு வெள்ளப் பாதிப்புகள் குறையும் என நம்புகிறோம். இதே போன்று ஒவ்வொரு ஏரியும் சங்கிலித்தொடராக இணைக்கப்படும். 4 அடி அகலமும் 2.5 அடி ஆழமும் கொண்டதாக இந்தக் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. மழைக்காலங்களில் அதிக அளவு பாதிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்தப் பகுதிகளில் பணிகளைத் தொடங்க இருக்கிறோம். முதல்கட்டமாக ஆதனூர், சேலையூர், சிட்லபாக்கம், நாராயணபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளை மற்ற ஏரிகளுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக நில அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். தாம்பரம் இருப்புலியூர் ஏரியிலிருந்து வெளியேறும் மழைநீர் நேரடியாக அடையாற்றில் செல்லும் வகையில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பாதாள மூடுகால்வாய் திட்டம் அமைய உள்ளது. அதேபோல் பெருங்களத்தூர் பகுதியிலிருந்து பாப்பான் கால்வாய்க்கும் (600 மீட்டர்), சேலையூர் ஏரியிலிருந்து சிட்லபாக்கம் வழியாகச் செம்பாக்கம் ஏரிக்கும் (1,350 மீட்டர்), முடிச்சூர் சாலையிலிருந்து அடையாறு ஏரிக்கும் (1,300 மீட்டர்), நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குச் செல்லவும் (870 மீட்டர்), ஊரப்பாக்கம் - ஜி.எஸ்.டி சாலை, ஆதனூர் ஏரியிலிருந்து அடையாற்றுக்குச் (800 மீட்டர்) செல்லவும் மூடு கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. சேலையூர்-செம்பாக்கம் மூடுகால்வாய் பணிக்கு 36 கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் 12 கோடி ரூபாயைத்தான் அரசு ஒதுக்கி இருக்கிறது. இதனால் ஒதுக்கீடு செய்த தொகைக்கான பணிகள் மட்டுமே செய்ய முடியும்” என்கிறார்.

தான் வாழ்ந்த இடத்தை மறக்காமல் தண்ணீர் வந்தடையும் என்பதே வரலாறு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்