ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலைச் செடிகள் அகற்றும் பணி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் அமலைச் செடிகளை அகற்றும் பணியை வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் தொடங்கி வைத்தார்.

தாமிரபரணி

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகள் தாமிரபரணி ஆற்றின் மூலமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீரை நம்பியே இரு மாவட்டத்திலும் விவசாயப் பணிகள் துவங்குவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் மற்றும் தென்கால் பாசனத்தை நம்பி 25,107 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

ஆற்றில் தண்ணீர் அதிகமாகப் பெருக்கெடுத்து வரும்போது மேற்பகுதியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளும் ஆற்றுத்தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. இந்தச் செடிகள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் நீண்ட தூரத்துக்குப் பசுமை போர்த்திய வயல்வெளி போன்று தேங்கிக் கிடக்கிறது. இதன் காரணமாக ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. 

இதுதொடர்பாக கடந்த வருடம் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர், மக்கள் நலச்சங்கத்தினர் அமலைச்செடிகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து செடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அணையின் முகத்துவாரத்தில் அவ்வப்போது தேங்கும் செடிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் வருவாய்த்துறையினர் தொடர்ந்து அகற்றி வந்தனர். இருந்தபோதும் அமலைச்செடிகள் மீண்டும் மீண்டும் வந்து அணை முழுவதும் தேங்கியது.

தாமிரபரணி

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் தாமஸ் பயஸ் அருள் தற்போது ஓட்டப்பிடாரத்துக்குப் பணி மாறுதலாகச் செல்ல உள்ளார். அவர் இருந்த காலத்தில் அணைக்கட்டுப் பகுதியில் அடிக்கடி தேங்கும் அமலைச்செடிகளை அகற்றும் பணி நடந்தது. அவர் பணி மாறுதலாகிச் செல்லும் கடைசி நாளான இன்று ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியுள்ள அமலைச்செடிகளை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். ஆழ்வார்தோப்பு கிராம உதயம், ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையின் பங்களிப்புடன் இந்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!