வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (20/07/2018)

`110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்?’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றதால் ஓர் ஆசிரியர் மட்டும் 110 குழந்தைகளைக் கவனித்து வந்துள்ளார். இதையறிந்த மக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப்பள்ளி. இங்கு சுமார் 110 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 200 பேருக்கு கல்வித்துறை சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்து சிறப்புப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காகப் பள்ளி தலைமையாசிரியை மாலதி, ஆசிரியைகள் சுபா, பாலசுந்தரி ஆகியோர் சென்றுவிட்டனர். பள்ளியில் சுபாஷ் என்கிற ஓர் ஆசிரியர் மட்டுமே இருந்து 110 குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார். இதனால் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். "110 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் எப்படி பாடம் நடத்த முடியும்?. அதோடு, குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பாகக் கவனித்து கொள்ள முடியும் எனக்கூறி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேலு தலைமையில் பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த வட்டாரக்கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் மாலதி மற்றும் ஆசிரியர்களைப் பள்ளிக்குத் திரும்ப அனுப்பி வைத்தார். அவர்கள் பள்ளிக்கு வந்து பெற்றோர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். "பள்ளி விடுமுறை நாள்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இல்லையேல், மாணவர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்திக் கொள்ளுங்கள்" எனப் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்களின் முறையீடு குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்' என வட்டாரக் கல்விதுறை சார்பில் உறுதியளிக்கப்பட்டு பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து, அவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

தஞ்சை

பெற்றோர் ஒருவரிடம் இதுபற்றி பேசினோம், ``பள்ளி வேலை நாள்களில் ஆசிரியர்கள் பயிற்சிக்குச் சென்றுவிடுவதால், மாணவர்கள் கல்வி கற்காமல், சும்மாவே அமர்ந்து இருக்கும் நிலை உள்ளது. மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது. ஓர் ஆசிரியர் நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கண்காணிப்பதும், பாடம் நடத்துவதும் முடியாத காரியம். எனவே, விடுமுறை நாள்களில் இது போன்ற பயிற்சியை நடத்தட்டும். மேலும், இதே போன்று குழந்தைகளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஆசிரியர்கள் வெளியே சென்றதால்தான் கோரவிபத்தான கும்பகோணம் பள்ளி  தீ விபத்து நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்தான், அதன் 14-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது எனக் கூறி குழந்தைகள் விஷயத்தில் மெத்தனமாக இருக்காமல் இருப்பதற்கு இந்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்த நேரத்தில் அதுவும் அரசுப் பள்ளியில் இதுபோன்று நடப்பது வேதனையளிக்கிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி என எதுவாக இருந்தாலும் குழந்தைகள் விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க