வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:20 (20/07/2018)

5 நாய்களை அடித்துச் சென்ற சிறுத்தை! - கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை முடிவு

நெல்லை மாவட்டத்தின் மலையோரக் கிராமத்தில் சிறுத்தை நுழைந்து நாய்களை அடித்து காட்டுக்குள் தூக்கிச் சென்றது. மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ஆட்சியர் - சிறுத்தை அச்சத்தில் மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு. நெல்லை மாவட்டம் கடனா அணையின் அருகில் உள்ள இந்தப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. கடந்த ஆண்டு சிறுத்தை நுழைந்து ஆடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளைத் தூக்கிச் சென்றது. அதை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர், தொல்லை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இந்தக் கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை, அன்பரசன், கன்னியம்மாள், செல்லப்பாண்டி, கோட்டாறு ஆகியோரது வீடுகளில் இருந்த 5 வளர்ப்பு நாய்களை அடித்து தூக்கிச் சென்றது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் சாலையில் கரடி நடமாட்டம் இருந்ததால் அச்சத்தில் பொதுமக்கள் இருந்த நிலையில், இரவு நேரம் முழுவதும் நாய்கள் அங்குமிங்கும் ஓடிய சத்தம் கேட்டபோதிலும் அச்சம் காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. 

இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், தங்கள் பகுதியில் வன விலங்குகளால் விளை நிலம் சேதம் அடைவதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். அத்துடன், கடந்த இரு தினங்களாக குடியிருப்புக்குள் நுழைந்து நாய்களை அடித்துச் சென்ற சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கவும் வலியுறுத்தினார்கள். 

வன விலங்குகளால் அச்சம்

விவசாயிகளின் குறைகளைக் கேட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ’வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் அகழி மற்றும் மின்வேலியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை அச்சுறுத்தும் வன விலங்கை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். அதன்படி, வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதால் பெத்தான்பிள்ளை குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.