மதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ்!

வைகை ஆற்றில் மணல் திருடும் கும்பலிடம் மாமூல் வசூலிக்க காவல் ஆய்வாளரும், தலைமைக் காவலரும் சண்டை போட்டுக்கொண்டது வாட்ஸ்அப்பில் பரவியதால், இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை

மதுரை நகருக்குள் செல்லும் வைகை ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டிகளை வைத்து மணல் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. இதைத்தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மாமூல் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மதுரை அண்ணா நகர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்பகுதியில் ஒரு கும்பல் மணல் திருடிக்கொண்டிருந்தபோது, அங்கு திடீரென்று வந்த மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம்சந்திரன், முதலில் அவர்களைக் கைது செய்வதுபோல பேசி, பிறகு, 'ஒரு வண்டிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் மாமூல் தர வேண்டும்'  என்று கேட்டிருக்கிறார். 'நாங்கள் ஏற்கெனவே அண்ணா நகர் ஸ்டேஷன் ஏட்டையாக்கு மாமூல் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு எப்படி தருவது' என்று பதிலளிக்க, 'அதெல்லாம் தெரியாது, எனக்கு மாமூல் வரணும்' என்று காவல் ஆய்வாளர் கறாராகச் சொல்ல, அந்த நேரம் அங்கு வந்த அண்ணாநகர் ஸ்டேஷன் ஏட்டு ராம்குமாருக்கும் காவல் ஆய்வாளருக்கும் கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இவர்களின் சண்டையைப் பார்த்து பதறிப்போன மணல் திருடர்கள்.``உங்க சண்டையை விடுங்க, ரெண்டு பேருக்கும் மாமூல் தருகிறோம்" என்று சொல்லி போலீஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கிறார்கள். இதை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் ரீலிஸ் செய்ய, இயற்கை வளத்தைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினரின் கடமை உணர்ச்சியை மக்கள் அனைவரும் பார்க்கும்படி ஆனது. இதை, மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதமும் பார்க்க, இருவரையும் கடுமையாக எச்சரித்து ஆயுதப்படைக்கு உடனே மாற்றி உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் மாமூல் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் பதறிப்போயுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!