லாரிகள் வேலைநிறுத்தம்! - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

தூத்துக்குடியில் லாரிகள் ஸ்டிரைக்கினால் 6 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் உப்பு, மீன், வாழைத்தார், மணல், கல் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும் பணிகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் தீப்பெட்டிப் பண்டல்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகும் உர மூட்டைகள் ஆகியவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

லாரிகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து,  நாடு முழுவதிலும் உள்ள லாரி உரிமையாளர்கள்  இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சரக்குப் போக்குவரத்துகள் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான தூத்துக்குடியில் உள்ளூருக்குள்  2 ஆயிரம் லாரிகளும், வெளியூர்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போக்குவரத்தில் 4 ஆயிரம் லாரிகள் என மொத்தம் 6 ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன. இந்த லாரிகள் அனைத்தும், இன்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

உர மூட்டைகள் தேக்கம்

இதனால், தூத்துக்குடியில் லாரி மூலம் நடைபெற்று வரும் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு ஏற்றுமதியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கோவில்பட்டியில் தீப்பெட்டிப் பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. பண்டல்கள் தேக்கத்தால் தீப்பெட்டிகளின் உற்பத்தியும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால், 4 லட்சம் நேர்முக மற்றும் மறைமுக தீப்பெட்டித் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அதேபோல காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக யூரியா, பொட்டாஷ் போன்ற விவசாயத்துக்குப் பயன்படும் சுமார் 1 லட்சம் டன் உர மூட்டைகள் துறைமுக குடோன்களில் முடக்கப்பட்டுள்ளன.

நிறுத்திவைக்கப்பட்டுள்ள லாரிகள்

லாரி ஸ்டிரைக் குறித்து தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர், ஜெகன் கூறுகையில், ``டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடக்கும் லாரிகள் வேலை நிறுத்தத்தில், துாத்துக்குடியில் ஓடும், 4 ஆயிரம் லாரிகளும் பங்கேற்றுள்ளன. இதனால் தூத்துக்குடியில், துறைமுக சரக்கு கையாளும் பணிகள், உப்பு, கல், மணல், காய்கறிகள், வாழைத்தார்கள், மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார். இதேபோல், லாரி புக்கிங் ஏஜண்ட் அசோசியேஷன் செயலர், சுப்புராஜ் கூறுகையில், ``இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உள்ளூர், வெளியூர்களுக்குச் செல்லும்  லாரிகளுக்கு புக்கிங் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம்”  என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!