`அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை!’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம்

2015-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி., இன்னும் 1,000 தினங்களில் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கி பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர் நாடு முழுவதும் பெரும் விழாவாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். 

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

இதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``2018 ஏப்ரல் 29-ம் தேதி, இது ஒரு அருமையான தருணம்... ஏன் என்றால்? சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத ஒரு மகத்தான சாதனையை பா.ஜ.க அரசு செய்துவிட்டது. இந்தச் சாதனையை மணிப்பூர் மாநிலத்தில் சேனாபதி மாவட்டத்தில் உள்ள லீசாங் என்ற மலைகிராமத்துக்கு மின் வசதி செய்து கொடுத்ததன் மூலம் பா.ஜ.க அரசு சாதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் சாதனையை பா.ஜ.க அரசு, நாட்டு மக்களுடன் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கின்றது. இது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான மைல்கல்’’ என்று பதிவு செய்திருந்தார். 

அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எந்த அரசியல் கட்சியும் மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஒரு சில ஊடகங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. நாட்டில் இன்னும் எத்தனையோ மலைக் கிராம மக்கள் மின்சாரம் வசதியின்றி தவித்து வருவதாக ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் பிரதமர் மோடியும், பா.ஜ.க-வினரும் விளக்கம் அளிக்கவில்லை. 

சுவிட்ச் ஆன் செய்யும் அமைச்சர்

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாளம் பஞ்சாயத்தில் உள்ள கோட்டூர்கொள்ளை என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்துக்கு நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் (இன்று) ஜூலை 20-ம் தேதி தமிழக மின்சாரத் துறை 84 மலைவாழ் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோட்டூர்கொள்ளை மலைவாழ் கிராமத்தில் மின்சாரத்துறை சார்பாக இந்த நிகழ்வு அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போது,  84 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கி, வீடுகள் தோறும் சென்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சுவிட்சைப் போட்டு விளக்கை எரியவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!