கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..! | Coimbatore Government hospital denies to Park 108 Ambulance inside the campus

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:21 (20/07/2018)

கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் 108 ஆம்புலன்ஸ்களை, நிறுத்தி வைக்கக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

108 ஆம்புலன்ஸ்

நேரம், காலம் கிடையாது… சரியான ஊதியம் கிடையாது… பணி உபகரணங்களும் கிடையாது… இப்படி ஏராளமான நெருக்கடிகளுக்கு நடுவில்தான், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தினமும் பணி செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் இப்படி 34, 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இது தவிர, திருப்பூர் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும் தினசரி ஏராளமான ஆம்புலன்ஸ்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றன.

108 ஆம்புலன்ஸ்களை நிறுத்துவதெற்கென்று தனியாக இடம் ஒதுக்கப்படாததால், அவை கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை அனுமதித்துவிட்டு, மீண்டும் வெளியில் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் ஒன்று முயன்றுள்ளது. ஆனால், அந்த ஆம்புலன்ஸ் வெளியே வரமுடியாதபடி மருத்துவக் கல்லூரியின் பேருந்துகள் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களிடம் 108 ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, மருத்துவக் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்ததுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மருத்துவக் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், இதை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாராகவும் தெரிவித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸை மருத்துவமனை நிர்வாகத்துக்குள் நிறுத்தி வைக்கக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், மருத்துவமனைக்கு வெளியே 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் பெற முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர், அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.