வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/07/2018)

கடைசி தொடர்பு:22:30 (20/07/2018)

லாரிகள் வேலைநிறுத்தத்தைப் பற்றி பேச மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை! உரிமையாளர்கள் சம்மேளனம்

குமாரசாமி

``லாரி உரிமையாளர்களின் நியாயமான போராட்டத்தை சுமுகமாக முடிக்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. போராட்டத்தை சீர்குலைக்க நினைத்தால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்'' என்று  சேலத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாரசாமி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ``அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. தமிழகமும் முழுவதும் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து லாரிகளும் ஓடவில்லை. லாரிகள் ஓடுகிறது என்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் அதிக தொகை வசூலிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும். டோல்கேட் கட்டணம் வசூலிப்பதால் ஒரு லட்சம் கோடி வீணாகிறது. எனவே, டோல்கேட் கட்டணத்தை வருடத்துக்கு ஒரு முறை லாரி ஓனரே கட்ட அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செயல்படுத்தாதபட்சத்தில் போராட்டம் தொடரும். அதற்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய தரை வழி அமைச்சரிடம் பேசியும் எந்த முன்னேற்றம் இல்லை. மத்திய பா.ஜ.க., அரசுக்கு லாரிகள் வேலை நிறுத்தம் குறித்துப் பேச விருப்பம் இல்லை. தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், ரூ.250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. போராட்டத்தை மத்திய அரசு முடக்கும் நிலை ஏற்பட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. இதனால், பொதுமக்களுக்கு சிறு சிரமங்கள் ஏற்படும். அதை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். வடமாநிலங்களிலிருந்து வரக் கூடிய பொருள்கள் வராது. அதனால் விலைவாசி உயர்வு ஏற்படும். போராட்டத்தின் பாதிப்பு 3 நாள்களில் தெரியும். வாட் வரி குறைக்க மாநில அரசிடம் கேட்டும் இதுவரை எங்களை அழைத்துப் பேசவில்லை. அரசு எங்களை அழைத்துப் பேசினால் மட்டுமே, போராட்டம் வாபஸ் பற்றி பேச முடியும்.

தென் மாநிலங்களில் 15 லட்சம் வாகனங்கள் ஓடாததால், 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் லாரி, புக்கிங் ஆபீஸ் லாரிகள், சிறு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், கேஸ் டேங்கர் லாரிகளும் போராட்டத்தில் விரைவில் பங்கு பெற உள்ளன'' என்றார்.