வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:54 (20/07/2018)

``நீதிமன்றத்துக்கு வந்தவர்களைத் தாக்கியது முறையல்ல!" - டிராஃபிக் ராமசாமி

நீதிமன்றங்கள்தான் மக்களைப் பாதுகாக்கக் கூடிய கடைசிப் புகலிடமாக இருக்கிறது. இங்கேயே பாதுகாப்பு இல்லையென்றால் வேறு எங்குதான் போவது. இந்த விவகாரத்தில் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கைப் பார்த்த போலீஸார், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிராஃபிக் ராமசாமி

``நீதிமன்றத்துக்கு வந்தவர்களைத் தாக்கியது முறையல்ல!

பாலியல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு கைதுசெய்யப்பட்ட 17 பேரும், கடந்த 17-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மிக முக்கிய வழக்காக அனைத்துத் தரப்பிலும் இவ்வழக்கு கவனிக்கப்பட்டதால், 17 பேரையும் மறைவான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனில் அமரவைத்திருந்தனர். நீதிமன்ற நடைமுறைப்படி, அன்றையப் பட்டியலில் உள்ள வழக்கு எண்களை, வழக்கு நடக்கும் நீதிமன்ற வாசல் சுவரில் ஒட்டிவிடுவார்கள். அந்த வரிசையின்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அவ்வகையில் வழக்கு வரிசை வந்ததும், 17 பேரையும் போலீஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார்கள். அப்போது திடீரென பாய்ந்து வந்த ஒரு கும்பல் 17 பேரையும் குறிவைத்துக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. அவர்களைப் பத்திரமாக மீட்கப் போலீஸார் கடுமையாகப் போராடினர். பத்து நிமிடங்கள் வரை நீடித்த இந்தத் தாக்குதலில் இருந்து அனைவரும் ஒருவழியாக மீட்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகத்தான் டிராஃபிக் ராமசாமி வழக்கு போட்டிருக்கிறார். டிராஃபிக் ராமசாமியிடம் இதுகுறித்து கேட்டோம், ``போலீஸ் கஸ்டடியில் இருக்கும் 17 பேரும் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டவர்கள். பத்திரமாக அவர்களை ஆஜர்படுத்தி, அதன்பின்னர் நீதிமன்றம் சொல்கிற நாள் வரை, அவர்களை நீதிமன்ற கஸ்டடியில் வைப்பதுதான் முறை. இதற்கிடையில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு போலீஸாருக்குதான் உள்ளது. இந்த இடத்தில்தான் காவல்துறை தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதுபோல நடந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பொறுப்பை உணர்ந்து, அவர்கள் கடமையாற்றவில்லை. மிக முக்கிய வழக்கு இது என்று தெரிந்தும் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆஜர்படுத்தப்படுகிறவர்கள், ஆஜர் ஆகிறவர்கள் அனைவருக்கும் நீதிமன்றத்தில் சரணடைந்தால் நாம் உயிரோடும், பாதுகாப்போடும் இருப்போம் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. அந்த நம்பிக்கை பொய்க்கும் விதத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்கிறார்கள். 'குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே தாக்கியவர்கள், போலீஸாரோ, வக்கீல்களோ, பொதுமக்களோ அது யாராக இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றமே முன்வந்து (சுமோட்டோ) நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, நீதிமன்றத்தில் நான் முறையிட்டேன்.  

டிராஃபிக் ராமசாமி

என்னுடைய இந்த முறையீட்டுக்கு நீதிமன்றம் சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வரும் திங்கட்கிழமை வரை பார்த்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கப் போகிறேன். மத்திய தொழிற்பாதுகாப்பு (சி.ஐ.எஸ்.எஃப்) படை போலீஸாருக்கு, மகிளா நீதிமன்றத்தின் அருகே, பாதுகாப்புக்கான வேலை இல்லை. இனிமேல் இங்கும், இதுபோல் பிரச்னை நடக்கிற இடங்களிலும், சி.ஐ.எஸ்.எஃப்., மூலம் பாதுகாப்பை கொடுக்கச் சொல்லி, கேட்கப் போகிறேன். நீதிமன்றங்கள்தான் மக்களைப் பாதுகாக்கக் கூடிய கடைசிப் புகலிடமாக இருக்கிறது. இங்கேயே பாதுகாப்பு இல்லையென்றால் வேறு எங்குதான் போவது. இந்த விவகாரத்தில் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கைப் பார்த்த போலீஸார், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட வேண்டும்.

கோவை, சிங்காநல்லூரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது சிங்காநல்லூர் போலீஸார் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து, சரணடைந்தவரைக் கைது செய்தனர். திருப்பூர் பார் கவுன்சில், இதற்குக் கண்டனம் தெரிவித்து,  தலைமை நீதிபதிக்கு அறிக்கை கொடுத்தது. போலீஸாருக்குக் கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, 'நீதிமன்றத்தில் சரணடைந்தவரை அதன் அறைக்குள்ளேயே போய் கைது செய்யக் கூடாது எனக் காவல்துறைக்கு தெரியாதா?' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பின்னர், தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வு, இந்த விவகாரத்தைத் தாமே முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது. சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பேர், நீதிமன்றத்தில் ஆஜராகி, 'எங்களுடைய செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குங்கள்' என்று மனுத்தாக்கல் செய்தார்கள். இதன்பின்னர், 'நீதிமன்றத்தில் போலீஸார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம்' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சரணடைய வந்தவரை நீதிமன்றத்தில் நுழைந்து கைது செய்த போலீஸ் ஏட்டு (தலைமைக் காவலர்) மன்னிப்பை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிமன்ற நடவடிக்கைகள், அதற்கான மாண்புகள் என்று பல விஷயங்கள் இருக்கிறது. இது காவல்துறை அறியாதது அல்ல.." என முடித்துக்கொண்டார்.


டிரெண்டிங் @ விகடன்