வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (20/07/2018)

கடைசி தொடர்பு:21:47 (20/07/2018)

ஆயுள் கைதிகளுக்கு மறுவாழ்வு வாய்ப்புகள் அளிக்காமல் விடுதலை செய்யலாமா?

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை முன்கூடிட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஆயுள் கைதிகளுக்கு மறுவாழ்வு வாய்ப்புகள் அளிக்காமல் விடுதலை செய்யலாமா?

காத்மா காந்தி, பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே கைதிகளின் நன்னடத்தையின் அடிப்படையில், சிறை விதிகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவுசெய்த 107 ஆயுள் தண்டனைக் கைதிகள், கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2008-ம் ஆண்டு, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 1,339 ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு தமிழகத்தில் பல ஆண்டுகள்வரை கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ''10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்'' என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

புழல் சிறையிலிருந்து கைதிகள் விடுதலை

அதன்படி, நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தமிழக சிறைகளிலிருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை முன்கூடிட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது, ``மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை விடுவிக்கும் சிறப்புத் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, கைதிகளை மூன்று கட்டங்களாக விடுதலை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 2018 அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி தினத்தன்று கைதிகளில் ஒரு பிரிவினர் விடுவிக்கப்பட உள்ளனர். இரண்டாவது கட்டமாக 2019 ஏப்ரல் 10-ம் தேதி (சம்பாரன் சத்தியாகிரக ஆண்டு தினம்) மற்றொரு பிரிவினர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். மூன்றாவது கட்டமாக 2019 அக்டோபர் 2-ம் தேதி அன்று (மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா) மற்றொரு பிரிவு கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான விதிகள்: 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் அவர்களின் தண்டனைக் காலத்தில் 50 சதவிகிதத்தை நிறைவு செய்துள்ள பெண் கைதிகள் மற்றும் திருநங்கை கைதிகள், ஆண் கைதிகளில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடன் தண்டனைக் காலத்தில் 50 சதவிகிதத்தை நிறைவு செய்தோர், 70 சதவிகித உடல் குறைபாட்டுடன் 50 சதவிகித தண்டனைக் காலத்தை நிறைவு செய்தமாற்றுத் திறனாளி கைதிகள், மீள முடியாத நோய்வாய்ப்பட்டு, தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை நிறைவு செய்த கைதிகள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட அல்லது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதிகளுக்கு இந்த சிறப்பு விடுதலை வழங்கப்படமாட்டாது. வரதட்சணைக் கொலை, பாலியல் பலாத்காரம், மனிதக் கடத்தல் போன்ற குற்றங்கள் புரிந்தவர்களுக்கும், பொடா, யுஏபிஏ, தடா, எஃப்ஐசிஎன், போக்ஸோ சட்டம், கறுப்பு பணப் பதுக்கல், பெஃமா சட்டம், என்.டி.பி.எஸ், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் ராஜா

சிறப்புத் திட்டத்தின் கீழ் விடுதலை செய்வதற்குத் தகுதிவாய்ந்த கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. கைதிகளின் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைக்குமாறு மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி, ஆளுநரின் ஒப்புதலுக்கு, மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். அதன் பின்னர், மூன்று கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சுனில் ராஜா கூறுகையில், ``இப்போதுதான், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பெயரைச் சொல்லி பலநூறு ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு முறையான மறுவாழ்வு வசதிகள் எதையும் சிறைத்துறை செய்து கொடுக்கவில்லை. இப்போது, காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுவிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில், சேர்க்கப்பட்டுள்ள விதிகளின் படி, அதிக எண்ணிக்கையில் கைதிகள் விடுதலை ஆக வாய்ப்பு இருக்கிறது. வயது முதிர்வு, நோய் காரணமாக சிறையில் இருப்போர்களுக்கு இது மறுவாழ்வுதான். ஆனால், அவர்கள் வெளியே சுதந்திரக்காற்றை மட்டும் சுவாசித்தால் போதுமா? உயிர் வாழ அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டாமா? அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்