வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (20/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (20/07/2018)

`சாக்கடையான நங்காஞ்சி ஆறு!’ - சுத்தப்படுத்தக் கோரும் கரூர் மக்கள்

நங்காஞ்சி ஆறு

``எங்க பகுதிக்கு நீராதாரமாக இருந்த நங்காஞ்சி ஆறை ஆங்காங்கே ஆக்கிரமித்து சிதைத்துவிட்டார்கள். நல்ல அகலத்தில் இந்த ஆற்றில் கலந்த ஓடை ஒன்றை ஆக்கிரமித்து இப்போது ஓடையின் ஜாடைகூட இல்லாமல் சிறு வாய்க்கால் அளவுக்கு செய்துவிட்டார்கள். அதிலும் வீடுகளின் சாக்கடையைக் கலந்துவிடுகிறார்கள். 'நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை கலப்பதைத் தடுத்து, அந்த ஆற்றை பாதுகாப்பேன்'னு மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை, தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்தார். ஒண்ணும் நடக்கலை" என்று புலம்புகிறார்கள் மக்கள். 

நங்காஞ்சி ஆறு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என்று இரண்டு பேரூராட்சிகளும் நூற்றுக்கணக்கான கிராமங்களும் உள்ளன. 'மழை பெய்தால்தான் விவசாயம் உண்டு' என்று வானம் பார்த்த மானாவாரி பூமி இது. இந்தப் பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளை உரசியபடி செல்லும் நங்காஞ்சி ஆறுதான். ஆனால், ஒருகாலத்தில் நீர் ஆதாரமாக நங்காஞ்சி ஆறு இருந்திருக்கிறது. இப்போது?. 

இதுபற்றி பேசிய பள்ளப்பட்டி பகுதி இளைஞர்கள் சிலர்,"அதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு வரைதான். அப்போது, நங்காஞ்சி ஆறு எங்கள் பகுதிக்கு நீர் ஆதாரத்தைக் கொடுத்து வந்தது. நங்காஞ்சி ஆறு, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுங்கிற கிராமத்துல மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகுது. அங்கே இருந்து திண்டுக்கல் மாவட்டம் எடையக்கோட்டையில் கீழ் இறங்கி, கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சின்னு ஓடி நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்குது.

நங்காஞ்சி ஆறு

இந்த ஆற்றை நம்பிதான் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் நீர் ஆதாரம் இருந்தது. இந்த ரெண்டு பேரூராட்சிகளிலும் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, இந்தப் பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை அதிரிக்கச் செய்தார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த ஆற்றின் குறுக்கே எட்டு தடுப்பு அணைகள் கட்ட, ஆற்றில் தண்ணீர் வருவது குறைந்தது. அதேபோல், நங்காஞ்சி ஆற்றை ஆங்காங்கே கரூர் மாவட்டத்தில் பலர் ஆக்கிரமித்தார்கள். மனித கழிவுகள், குப்பைகளைப் போடும், சாக்கடைகளைக் கலக்கும் இடமாக மாற்றினார்கள். கடந்த எம்.பி தேர்தலில் இப்போதைய கரூர் எம்.பி தம்பிதுரை, 'என்னை ஜெயிக்க வைத்தால், இந்த நங்காஞ்சி ஆற்றில் சாக்கடை கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாப்பேன்'னு சொன்னார். அடுத்த எம்.பி தேர்தலே வரப்போகிறது. அவர் சொன்னதைச் செய்யலை. எப்போதான் நங்காஞ்சி ஆறு வாக்குறுதியை நிறைவேற்றுவார்" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.