வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:01:00 (21/07/2018)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் தஹில் ரமணி! கொலிஜியம் பரிந்துரை

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த 2017-ம், ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து அந்தப்பதவிக்கு இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் தற்போது பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தஹில் ரமணியை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தஹில் ரமணி குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பளித்தவர். குஜராத் கலவரத்தின்போது 19 வயது கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் ஒருவர் இறந்து விடவே 11 நபர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் வி.கே. தஹில் ரமணியும் ஒருவர்.  இவர் கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.