ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள்! சிவகங்கை குடோனில் சீல் வைப்பு

ராமேஸ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்டவைகள் சிவகங்கை அருகே உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் உள்ள வெடிமருந்துக் குடோனில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

வெடிபொருள்கள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் கடந்த ஜூன் 25-ம் தேதி, எடிசன் என்பவரின் வீட்டில் சாக்கடைக் கழிவு நீருக்காகப் பள்ளம் தோண்டும்போது ஏகே 47 ரகத் துப்பாக்கிகளில் பயன்படுத்தும் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சருக்குப் பயன்படுத்தும் வெடிமருந்து, ஏவுகணை வெடிபொருள், டைனமோ, கன்னிவெடி, கையெறி குண்டுகள் என ஆயுதக்குவியல் இருந்தது தெரியவந்தது. இவைகளை நேற்று மாலை சென்னை வெடிபொருள்கள் கட்டுப்பாட்டு அதிகாரி ஷேக்உசேன் தலைமையில் தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார் எட்டு அட்டைப்பெட்டி மற்றும் இரண்டு மரப்பெட்டிகளில் தோட்டாக்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றைப் பாதுகாப்புடன் சிவகங்கைக்கு எடுத்து வந்தனர். அவற்றை, சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவன வெடிபொருள்கள் கிடங்கில் உள்ள ஓர் அறையில் பாதுகாப்புடன் வைத்து அறையை சீல் வைத்தனர். சிவகங்கை தாலுகா போலீஸ் எஸ்.ஐ. முருகானந்தம், சுரங்க மேலாளர் ஹேமந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!