வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (21/07/2018)

மணல் கொள்ளை தீவிரம்: நள்ளிரவில் சிறைபிடிக்கப்பட்ட லாரிகள்!

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆற்று மணலைக் கொள்ளையடித்துச் சென்ற 4 லாரிகளைக் கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

தஞ்சாவூர்

 

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இன்னும் சில நாள்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் தண்ணீர் பாய்ந்தோடும். அதற்குள் ஆற்று மணலை இயன்ற வரை கொள்ளையடித்துவிட வேண்டும் என மணல் மாஃபியாக்கள் தீவிரமாகியுள்ளார்கள். இந்நிலையில்தான் நேற்று நள்ளிரவு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகேவுள்ள வாளியம்பட்டியிலிருந்து ஆற்று மணலை கொள்ளையடித்துச் சென்ற 4 லாரிகளைப் பக்கத்து ஊர் மக்கள் சிறைபிடித்துள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ``இங்கவுள்ள மக்கள் தங்களோட வீட்டு தேவைக்கு கொஞ்சம் மணல் அள்ளினால்கூட வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கிறாங்க. ஆனால், லாரிகள்ல மணலை கொள்ளையடிச்சிக்கிட்டுப் போகுற கொள்ளையர்களைக் கண்டுக்கிறதே இல்லை. கடந்த சில நாள்களாக மணல் கொள்ளையர்களோட அட்டகாசம் தீவிரமாயிடுச்சு.

மணல் கொள்ளை

வாளியம்பட்டி கிராமத்துல நேத்து ராத்திரி 7 லாரிகள்ல மணலை அள்ளியிருக்காங்க. எங்க ஊர் வழியாக அந்த லாரிகள் போகுறதைப் பார்த்துட்டு, நாங்க அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினோம். வாளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளைக்கு உறுதுணையாக இருந்ததோடு, எங்களை அவமரியாதையாகப் பேசி மிரட்டினார். ஆனாலும், நாங்க அந்த லாரிகளை விடுவிக்கலை. 4 லாரிகளை சிறைபிடிச்சிட்டோம். காவல் நிலையத்துக்கு தகவலும் தெரிவிச்சிட்டோம். மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தலைன்னா, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். கல்லணையில திறந்துவிடுற தண்ணீர் அந்த ஊர் வழியாகத்தான் எங்க ஊருக்கு வந்து பல கிராமங்களைக் கடந்து தஞ்சாவூர் போயாகணும். அதிகமாக மணலை அள்ளினால், ஆற்று தண்ணீர் சீராக ஓடி வராது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவாங்க” என ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.